மேற்கத்திய வணிக கோட்பாடுகளைக் கற்றுக் கொள்வதை விட்டு விட்டு, சீனாவைப் பார்த்துப் படிக்க வேண்டிய நேரம் இது என்று, சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
இந்தியா தனது சொந்த உற்பத்தித் துறையை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ள ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, பொருளாதார வளர்ச்சிக்கான சீனாவின் படிப்படியான அணுகுமுறையிலிருந்து கற்றுக்கொண்டு அதை இந்தியாவின் தேவைகளுக்கு ஏற்ப மாற்றுவதன் முக்கியத்துவத்தை விளக்கியிருந்தார்.
முதல் கட்டமாக இந்தியா இறக்குமதியைச் சார்ந்து இருப்பதற்குப் பதிலாக அதன் சொந்த வீட்டுப் பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்று ஸ்ரீதர் வேம்பு தெரிவித்திருந்தார். இரண்டாவதாக, மதிப்புச் சங்கிலியை மேம்படுத்த தொழில்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் ஸ்ரீதர் வேம்பு குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், சமீபத்தில் ஸ்ரீதர் வேம்பு, தனது எக்ஸ் பக்கத்தில், மேற்கத்திய வணிக சித்தாந்தங்களை, குறிப்பாக சி.கே. பிரஹலாத்தின் “பிரமிட்டின் அடிப்பகுதி” கோட்பாட்டை இந்தியா குருட்டுத்தனமாக ஏற்றுக்கொண்டதை விமர்சித்துள்ளார். மேலும், இந்தியாவின் ஏழைகளை நுகர்வோராக நடத்தப் படாமல், உற்பத்தியாளர்களாக மாற்றப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
செல்வ பிரமிட்டின் அடிப்பகுதி அல்லது பிரமிட்டின் அடிப்பகுதி மிகப்பெரிய, ஆனால் ஏழ்மையான சமூக-பொருளாதாரக் குழுவாகும். ஒரு நாளைக்கு இரண்டரை அமெரிக்க டாலருக்கும் குறைவான வருமானத்தில் வாழும் பில்லியன் கணக்கான மக்களை பிரமிட்டின் அடிப்பகுதி குறிக்கிறது.
இந்த வரையறை 1998 ஆம் ஆண்டு C.K. Prahalad மற்றும் Stuart L. Hart ஆகியோரால் முதன்முதலாக முன்மொழியப்பட்டது. மேலாண்மை அறிஞர் ((C.K. Prahalad )) சி.கே. பிரஹலாத், ((Stuart L. Hart)) ஸ்டூவர்ட் ஹார்ட்டுடன் இணைந்து எழுதிய The Fortune at The Bottom of The Pyramid என்ற நூல், 2004 ஆம் ஆண்டு வெளிவந்தது. அதில் தான், பிரமிட்டின் அடிப்பகுதி மக்கள் தொகையை ஒரு இலாபகரமான நுகர்வோர் சந்தையாகப் பிரபலப்படுத்தினார்.
பிரஹலாத்தின் “பிரமிட்டின் அடிப்பகுதியில் உள்ள செல்வம்” என்ற முக்கிய கோட்பாட்டை அறிவுசார் குழப்பம் மற்றும் ஆபத்தான கொள்கை வழிகாட்டுதல் என்று கடுமையாக விமர்சித்துள்ள ஸ்ரீதர் வேம்பு, இந்த தவறான கொள்கை தான், ஏற்கனவே கடனில் சிக்கியுள்ள அந்த மக்கள் மீது இன்னும் அதிகமான கடனைத் திணிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
மோசமான இந்த மேற்கத்திய வணிக கொள்கை, மக்களின் செல்வத்தையும் நாட்டின் செல்வத்தையும் எடுத்துக்கொள்ளும் என்று எச்சரித்துள்ள ஸ்ரீதர் வேம்பு, ஏழைகளுக்குத் தேவையானது உற்பத்தி வேலைக்கான வாய்ப்பு மட்டுமே என்று விளக்கியுள்ளார்.
உற்பத்திக்குப் பிறகு மட்டுமே நுகர்வு. வருமானத்துக்குப் பிறகு மட்டுமே செலவு என்பது தான் வளர்ச்சிக்கான வழி என்றும் தெரிவித்துள்ளார். குறைந்த விலை உற்பத்தி மையத்திலிருந்து உலகளவில் ஒரு தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப நிறுவனமாகச் சீனா வளர்ந்து வருகிறது.
எனவே, அமெரிக்க வணிகப் பள்ளிகளிலிருந்து கருத்துக்களைக் கடன் வாங்குவதற்குப் பதிலாக, ஒரு விடாமுயற்சியுள்ள மாணவனைப் போலச் சீனாவைப் படிக்க வேண்டும் என்றும் ஸ்ரீதர் வேம்பு அழைப்பு விடுத்துள்ளார். கூடுதலாக, நாட்டின் வெற்றியை நேரடியாக ஆய்வு செய்யச் சீனாவுக்கு தொழில்துறை யாத்திரை ஒன்றை ஏற்பாடு செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.
துரதிர்ஷ்டவசமாக, இந்திய நிறுவன உலகில் ஆதிக்கம் செலுத்தும் கருத்துக்கள் பெரும்பாலும் அமெரிக்க வணிகப் பள்ளிகளிலிருந்தே, அதுவும் பெரும்பாலும் இந்தியப் பேராசிரியர்களிடமிருந்து வருகின்றன என்றும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க வலிமையின் வீழ்ச்சிக்குக் காரணம் அங்குள்ள வணிகப் பள்ளிகள்தாம் என்று ஆணித்தரமாகக் குறிப்பிட்டுள்ள ஸ்ரீதர் வேம்பு, வறுமையைப் போக்க ஒரே வழி, நுகர்வோரின் சந்தையாக இல்லாமல், ஏழைகளை உற்பத்தியாளர்களாக மாற்றுவதே ஆகும் என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார்.