திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்த குன்னத்தூர், பெருமாநல்லூர் சாலையில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களிடம் கஞ்சா போதையிலிருந்த நபர்கள் தகராறு செய்து, பள்ளி மாணவர்களை அரிவாளால் வெட்டத் துரத்திச் செல்லும் காணொளி மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், பெருகியிருக்கும் போதைப் பொருள்கள் புழக்கத்தால், தமிழகம் முழுவதுமே சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருக்கும் நிலையில், தற்போது, பள்ளி செல்லும் குழந்தைகளின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும் அவல நிலையில் தமிழகம் இருப்பது வெட்கக்கேடு என கூறியுள்ளார்.
உடனடியாக, மாணவர்களை வெட்ட முயன்ற சமூக விரோதிகளைக் கைது செய்ய வேண்டும் என்றும், தமிழகம் முழுவதும், பொது இடங்களில் போதையில் இருப்பவர்களால் பிரச்சினை ஏற்படாமல் கண்காணிக்க, காவல்துறை ரோந்து நடவடிக்கைகளை அதிகப்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
குறிப்பாக, பள்ளி, கல்லூரிகளின் அருகே, போதைப் பொருள்கள் புழக்கத்தைத் தடுக்க, கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் திமுக அரசை அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.