அமெரிக்காவின் புளோரிடாவின் சதை உண்ணும் பாக்டீரியா தொற்றால் பாதிக்கப்பட்ட 4 பேர் மரணமடைந்த செய்தி பலரையும் உலுக்கியுள்ளது. இவ்வகை பாக்டீரியாக்கள் முகத்துவார பகுதிகளில் காணப்படும் நிலையில், கடலில் நீராடுபவர்கள், மீனவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கிறது மருத்துவ உலகம்.
அமெரிக்காவில் ஒரே மருத்துவ காரணத்திற்காக 4 பேர் அடுத்தடுத்து மரணமடைந்த நிலையில், அவர்கள் நால்வரும் புளோரிடா கடலில் நீராடியதும், சதை உண்ணும் பாக்டீரியாக்களால் பாதிக்கப்பட்டிருப்பதும் மருத்துவ ஆய்வில் தெரியவந்துள்ளது.
(Vibrio vulnificus) விப்ரியோ வல்னிஃபிகஸ் என்ற பெயர் கொண்ட இந்த பாக்டீரியா, கடலுடன் நன்னீர் கலக்கும் கழிமுக பகுதிகளில் செழித்து வளரக்கூடியது. காலராவை ஏற்படுத்தும் பாக்டீரியா வகையைச் சேர்ந்தது என்றாலும், Vibrio vulnificus பாக்டீரியாக்கள் ஆபத்தானவை என்று வரையறுக்கப்பட்டுள்ளது.
புளோரிடா கடலோர பகுதி 20 டிகிரி செல்சியஸ்-க்கும் அதிகமான வெப்ப நிலையைக் கொண்டிருப்பதால், இவ்வகை பாக்டீரியாக்களுக்கு ஏற்ற இடமாக உள்ளது. காயங்கள், சிராய்ப்பு மூலமாகவும், பச்சையான கடல் உணவுகள் குறிப்பாகப் பச்சை சிப்பிகளை உண்பதன் மூலமாகவும் மனிதனுக்குப் பாக்டீரியா தொற்று ஏற்படுகிறது.
மனித உடலுக்குள் புகுந்ததும், காயத்தைச் சுற்றி அதிகப்படியான வலி, கொப்புளங்கள் ஏற்படும், வயிற்றுப்போக்கு, காய்ச்சல், குறைந்த ரத்த அழுத்தம் போன்றவற்றையும் ஏற்படுத்தும்.
இரத்த ஓட்டத்தில் எதிர்வினையாற்றும் இவ்வகை பாக்டீரியாக்கள், திசு மரணத்தை ஏற்படுத்தக் கூடியது. சில நேரங்களில் உடல் உறுப்புகளைத் துண்டித்து நோயாளியைக் காப்பாற்றினாலும், பெரிய அளவில் பலனளிக்காது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
கல்லீரல் நோய் உள்ளவர்கள், நீரிழிவு நோயாளிகள், நோய் எதிர்ப்புச் சக்தி இல்லாதவர்கள், முதியவர்கள் இவ்வகை பாக்டீரியாக்களால் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆபத்தான சதை உண்ணும் பாக்டீரியாக்களிடம் இருந்து தப்பிக்க, வெதுவெதுப்பான கடல் நீரில் நீராடுவதைத் தவிர்க்க வேண்டும், கடல் உணவைச் சாப்பிட்டு உடல்நலக்குறைவு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை நாட வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.