நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் சிறுநீரக விற்பனை குறித்து ஏற்கனவே புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என திமுக கவுன்சிலர் குற்றஞ்சாட்டி உள்ளார்.
பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதிகளில் விசைத்தறி தொழிலாளர்களின் வறுமையை பயன்படுத்தி சிறுநீரகம் விற்பனை செய்யப்படும் அதிர்ச்சி தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஒருசில இடைத்தரகர்கள் தனியார் மருத்துவமனைகளில் 5 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை பணம் பெற்றுக் கொண்டு, விசைத்தறி தொழிலாளர்களின் சிறுநீரகத்தை விற்பதாக செய்திகள் வெளியாகின.
இதுகுறித்து கடந்தாண்டே தமிழக அரசின் தனிப்பிரிவிற்கும், மாவட்ட ஆட்சியருக்கும், பள்ளிபாளையம் காவல் நிலையத்திலும் புகார் தெரிவித்ததாகவும், இருப்பினும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் திமுக கவுன்சிலர் பாலசுப்பிரமணியம் குற்றஞ்சாட்டி உள்ளார்.
இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள போலீசார், புகார் அடிப்படையில் இடைத்தரகர் ஆனந்தன் மற்றும் தொடர்புடைய புரோக்கர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, அன்னை சத்தியாநகர் குடியிருப்பில் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் ராஜ்மோகன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, இடைத்தரகராக செயல்பட்ட ஆனந்தன் என்பவர் விசைத்தறி தொழிலாளர்களை பெரம்பலூர் மற்றும் திருச்சி, கொச்சி உள்ளிட்ட இடங்களில் செயல்படும் பிரபல தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றது தெரியவந்தது. மேலும் ஆனந்தன் திமுகவை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.