நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் பள்ளி மாணவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், தனியார் பள்ளி வளாகத்தில் இருந்த வாகனத்தின் மீது உறவினர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தால் பதற்றம் ஏற்பட்டது.
வீரவநல்லூர் அருகே உள்ள மானாபரநல்லூர் பகுதியைச் சேர்ந்த சபரிகண்ணன் என்பவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 4ஆம் தேதி மாணவர் சபரிகண்ணனை ஆசிரியர் கண்டித்த நிலையில், வார விடுமுறை முடிந்து பள்ளிக்கு வந்த மாணவர், பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
பள்ளி வளாகத்தில் மயங்கி விழுந்த மாணவரை, ஆசிரியர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த மாணவர், அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிந்தார்.
இதனை தொடர்ந்து, பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவரின் சடலத்தை கொண்டு வந்த வாகனத்துடன் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், நெல்லை – அம்பை சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல் உயரதிகாரிகள், மாணவரின் உறவினர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி, பள்ளி ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என உறுதியளித்தனர். இதனை அடுத்து, மாணவரின் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
முன்னதாக, தனியார் பள்ளி வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீது மாணவரின் உறவினர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர். இதில், 2 பள்ளி பேருந்துகள் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.