ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை புகாரில் போலீசார் அலட்சியம் காட்டுவதாகவும், சம்பவம் நிகழ்ந்து 7 நாட்களாகியும் குற்றவாளி இதுவரை கைது செய்யப்படவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே, பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்ற 4ஆம் வகுப்பு பயிலும் சிறுமியை, மர்ம நபர் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சிறுமியை மர்ம நபர் கடத்திச் சென்ற சிசிடிவி வீடியோவும் வெளியாகி இணையத்தில் வைரலானது.
இந்த நிலையில், சம்பவம் குறித்த புகாரில் ஆரம்பாக்கம் காவல் நிலைய போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அலைக்கழித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அங்கு சிறுமிக்கு சிகிச்சை அளிக்காமல் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பியதாகவும், சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் குறித்து கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சென்னை ராயபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிறுமி சிகிச்சை பெற்று வரும் நிலையில், ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை முறையாக ஆய்வு செய்து சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கின் விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும், ஆரம்பாக்கம் ரயில் நிலையத்தில் நடைபெறும் சமூக விரோத செயல்களை தடுக்க ரயில்வே போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த வழக்கில் திருவள்ளூர் மாவட்ட முன்னாள் எஸ்பி சீனிவாச பெருமாள் ஏற்கெனவே இரண்டு தனிப்படைகள் அமைத்த நிலையில், புதிதாகப் பொறுப்பேற்ற காவல் கண்காணிப்பாளர் விவேகானந்தா சுக்லா 3 தனிப்படைகள் அமைத்தார்.
மொத்தம் 5 தனிப்படை போலீசார், குற்றவாளியைத் தேடி வரும் நிலையில், சம்பவம் நடைபெற்ற இடத்தில் எஸ்பி விவேகானந்தா சுக்லா ஆய்வு மேற்கொண்டார்.