மதுரையில் வரதட்சணை கேட்டு பெண்ணை கொடுமைப்படுத்திய விவகாரத்தில் ஒரே குடும்பத்தில் காவலர்கள் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தேனியைச் சேர்ந்த தங்கப்பிரியாவுக்கும், மதுரை அப்பன்திருப்பதி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றும் பூபாலனுக்கும் கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்த தங்கப்பிரியாவை, வரதட்சணை கேட்டு கணவர் குடும்பத்தினர் பல ஆண்டுகளாகத் துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்கப்பிரியாவை கணவர் பூபாலன் வரதட்சணை கேட்டு சரமாரியாகத் தாக்கியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், பூபாலன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது.
இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் பூபாலன், அவரது தந்தை மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டரான செந்தில்குமரன் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இதற்கிடையே, மனைவியைத் தாக்கியதைத் தனது சகோதரியிடம் பூபாலன் விவரித்துக் கூறும் ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.