பிரம்மோஸ் ஏவுகணைக்குத் தேவையான டைட்டானியம் மற்றும் SUPER ALLOYS உற்பத்தியில், இந்தியா தன்னிறைவு அடைந்துள்ளது. இது, நாட்டின் பாதுகாப்புத் துறையை வலுப்படுத்துவதோடு, சர்வதேச அரங்கில் இந்தியாவின் முக்கியத்துவத்தையும் பறைசாற்றுகிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
நாட்டின் பாதுகாப்புத் துறையில் தற்சார்பை அடைவதிலும் முக்கியத்துவம் வாய்ந்த இராணுவ உபகரணங்களை உருவாக்க வெளிநாடுகளைச் சார்ந்து இருப்பதைக் குறைப்பதிலும் இந்திய பாதுகாப்புத் துறையின் நிறுவனங்கள் முக்கியப் பங்காற்றி வருகின்றன.
வணிக விமானப் போக்குவரத்து முதல் மருத்துவம் தொடங்கி ராணுவ பாதுகாப்பில் அதிநவீன போர் தளவாடங்கள் மற்றும் விண்கல வடிவமைப்பு வரை புரட்சியை ஏற்படுத்தும் வகையில், விண்வெளித் துறையில் டைட்டானியம் மற்றும் super alloys பொருட்களின் பங்கு மிக முக்கிய பங்காற்றுகின்றன.
முதலில் டைட்டானியம் சிறந்த வலிமை-எடை விகிதத்தைக் கொண்டுள்ளது. அதாவது இது எஃகுக்கு இணையான வலிமையை வழங்கும் அதேநேரம், மிக இலகுவாகவும் இருக்கும். ஒரு விமானத்தின் எடை குறைப்பு, அதன் வேகம், சூழ்ச்சித்திறன் மற்றும் எரிபொருள் செயல்திறனை மேம்படுத்துகிறது.
டைட்டானியம் அரிப்பை அதிகபட்சம் எதிர்க்கிறது. இந்த எதிர்ப்பு விமானத்தின் பராமரிப்பு செலவுகளை வெகுவாக குறைத்து, விமானத்தின் ஆயுட்காலத்தை அதிகரிக்க உதவுகிறது.
மேலும், டைட்டானியம் உயர் வெப்பநிலை செயல்திறன் உடையதாகும். இந்த பண்பு குறிப்பாகத் தீவிர வெப்பத்துக்கு உட்படும் போர்விமானத்தின் இயந்திர பாகங்களுக்குப் பாதுகாப்பு அரணாக விளங்குகிறது. அதுமட்டுமில்லாமல், விமான சூழ்ச்சிகளின் போது மீண்டும் மீண்டும் அழுத்தத்தை அனுபவிக்கும் விமானங்களுக்கு டைட்டானியம் கட்டமைப்பு தோல்விகளைத் தடுக்க உதவுகிறது.
டைட்டானியம் காந்தமற்றது என்பதால் வழிசெலுத்தல் மற்றும் இலக்கு அமைப்புகள் போன்றவற்றில் காந்த குறுக்கீடு இருக்கக்கூடிய சில இராணுவ பயன்பாடுகளுக்கு மிகவும் சாதகமாக அமைகிறது. விமானக் கட்டமைப்பில் சிக்கலான வடிவங்கள் மற்றும் கூறுகளை உருவாக்குவதை டைட்டானியம் எளிதாக்கிறது.
எஃகுவை விட விலை அதிகமாக இருந்தாலும் அதன் தனித்துவமான பண்புகள் போர் விமானக் கட்டுமானத்தின் கடினமான தேவைகளுக்கு ஒரு மதிப்புமிக்க வேதியல் பொருளாக டைட்டானியம் அமைகிறது.
குறிப்பாக பிரம்மோஸ் போன்ற அதிநவீன க்ரூஸ் சூப்பர்சோனிக் ஏவுகணைகளை உருவாக்க இந்த டைட்டானியம் மற்றும் super alloys பொருட்கள் மிக முக்கியமானவையாகும்.
இதுவரை ரஷ்யா, சீனா, பிரான்ஸ், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் மட்டுமே டைட்டானியம் மற்றும் super alloys பொருட்களின் உற்பத்தித் திறனைப் பெற்றுள்ளன. இந்த நாடுகளின் வரிசையில் இப்போது இந்தியாவும் இணைந்துள்ளது.
லக்னோவில் உள்ள PTC இண்டஸ்ட்ரீஸ், பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை அமைப்புகளை உருவாக்குவதற்கு அவசியமான டைட்டானியம் மற்றும் super alloys பொருட்களை உற்பத்தி செய்யத் தொடங்கியுள்ளது.
அதிநவீன போர் விமானங்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் போர்க்கப்பல்கள் கட்டுவதற்கு மிகவும் அத்தியாவசியமான டைட்டானியம் மற்றும் super alloys பொருட்களை உற்பத்தி செய்யும் இந்த திறன்களும் தொழில்நுட்பங்களும் இதற்கு முன் இந்தியாவிடம் இல்லாமல் இருந்தது.
அதற்காக, வெளிநாடுகளைச் சார்ந்திருக்க வேண்டியிருந்த நிலைமை இருந்தது. இப்போது அந்த திறன்களும் தொழில்நுட்பங்களும் உள்நாட்டிலேயே உருவாக்கப் பட்டுள்ளன. அரிதான கனிமப் பொருட்களின் விநியோகத்தில் கட்டுப்பாடுகளை விதித்து இந்தியாவைச் சீனா மிரட்டியது. இந்தியாவை எந்த நாடும் மிரட்ட முடியாது என்பதை இந்தியா நிரூபித்துள்ளது. அதன் விளைவாக டைட்டானியம் மற்றும் super alloys பொருட்களை இந்தியா உற்பத்தி செய்யத் தொடங்கியுள்ளது.
இந்தியாவில், டைட்டானியம் மற்றும் super alloys பொருட்களைத் தயாரிக்கும் ஒரே தனியார் துறை நிறுவனமான PTC இண்டஸ்ட்ரீஸ், ஆண்டுக்கு 1500 டன் உற்பத்தியை வழங்கி வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் ஆண்டுக்கு 6,500 டன் உற்பத்தியை எட்டும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
ரஷ்யா ஆண்டுக்கு சுமார் 1,75,000 டன் டைட்டானியம் மற்றும் super alloys பொருட்களை உற்பத்தி செய்கிறது, இது உலகளாவிய உற்பத்தியில் 35 சதவீதமாகும். 2022 ஆம் ஆண்டு ரஷ்யா உக்ரைன் போர் தொடங்கியதிலிருந்து, இந்தப் பொருட்களின் விநியோகச் சங்கிலி உலக அளவில் சீர்குலைந்துள்ளது. சீனாவும்அரிய வகை கனிமங்கள் ஏற்றுமதிக்கு கடும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.
இந்தச் சூழலில், ரஷ்யா மற்றும் சீனாவிலிருந்து டைட்டானியத்தை வாங்க விரும்பாத அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள், இனி டைட்டானியம் மற்றும் super alloys பொருட்களுக்கு இந்தியாவை நம்பி இருக்கும் என்று கூறப்படுகிறது.