திமுக உள்ளாட்சி பிரதிநிதிகளின் தொடர் அராஜகத்தால் அரசு அதிகாரிகள் தங்களின் பணியைச் சுதந்திரமாகச் செய்ய முடியாத சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறையே தன் கட்டுப்பாட்டில் இருப்பது போல திமுக மண்டலக்குழுத் தலைவர் மிரட்டும் ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நான் சொல்வதை கேட்டு நடப்பதாக இருந்தால் இருங்கள். இல்லையென்றால் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சொல்லி உங்கள் வீட்டில் விசாரணை நடத்தச் சொல்வேன்.
சென்னை திருவொற்றியூரில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இடிந்து விழும் நிலையிலிருந்த குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் இருந்த மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றியதாகத் தமிழக அரசின் விருதைப் பெற்ற திமுக நிர்வாகி தனியரசு தான் இத்தகைய மோசமான ஆடியோவுக்கு சொந்தக்காரர்.
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு கவுன்சிலராகி திமுக மண்டலக்குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் அவரது நடத்தை முற்றிலும் மாறிவிட்டதாகப் புகார் எழுந்த நிலையில், திருவொற்றியூர் மண்டலத்தில் பணியாற்றி வரும் மின்துறை அதிகாரிக்குப் பகிரங்கமாக மிரட்டல் விடுக்கும் ஆடியோ சமூகவலைத்தளங்களில் பரவிவருகிறது.
மின்சார வாரியத்திற்குச் செலுத்த வேண்டிய தொகையை திமுகவினர் பலர் செலுத்தாத நிலையில், திமுகவினர் அப்படி தான் இருப்பார்கள் என்பதோடு, தேர்தல் நேரத்தில் அதிகாரிகள் இணைந்து கொள்ளையடித்ததாகவும் தனியரசு மின்சார வாரிய அதிகாரியை மிரட்டியுள்ளார். உடனடியாக தனக்கு வர வேண்டிய பணத்தைத் தரவில்லை எனில் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் பேசி வீட்டில் சோதனை நடத்தச் சொல்வேன் எனவும் அவர் மிரட்டிய ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அரசு அதிகாரி ஒருவரிடம் எப்படிப் பேச வேண்டும் என்ற நாகரீகத்தைச் சிறிதளவும் கடைப் பிடிக்காத திமுக மண்டலக்குழுத் தலைவர் தனியரசுவின் மிரட்டல் பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறையையே தன் கட்டுப்பாட்டில் இருப்பது போலப் பேசிய தனியரசுவின் மிரட்டலுக்குப் பயந்து அந்த மின்சாரத்துறை அதிகாரி பணிமாறுதல் பெற்றுச் சென்றுவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இது ஒருபுறமிருக்கச் சென்னை மாநகராட்சி பெருங்குடி மண்டலத்தில் செயல்பட்டு வரும் நூலகத்திலிருந்த மேஜையில் அதிமுகவினரின் நாட்காட்டி தென்பட்டுள்ளது. அதனைக் கட்டு ஆத்திரமடைந்த மண்டலக் குழு தலைவர் ரவிச்சந்திரன், பகுதி நேர நூலக ஊழியர்களைத் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். நூலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் பெண்கள் என்றும் பாராமல் ஒருமையில் பேசி ரவிச்சந்திரன் மிரட்டல் விடுக்கும் காட்சிகளும் திமுகவினரின் அதிகாரப்போக்கை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருப்பதாகப் புகார் எழுந்திருக்கிறது.
ஏற்கனவே இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருவொற்றியூர் பகுதியில் சாலை போடும் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளைத் தாக்கியதாக அத்தொகுதியின் எம்எல்ஏ கே.பி.பி சங்கர் மீது புகார் எழுந்தது. அரசுப்பணியில் இருக்கும் அதிகாரிகளை ஆளுங்கட்சியினர் மிரட்டுவதும், அவர்கள் மீது தாக்குதல் நடத்துவதும் தொடர்கதையாகி வருவது அரசு அதிகாரிகள் தங்களின் பணியைச் சுதந்திரமாகச் செயல்பட முடியாத சூழலை உருவாக்கியுள்ளது.