உத்தமசோழபுரத்தில் விவசாயிகளின் எதிர்ப்பை மீறி தடுப்பணை கட்டும் திமுக அரசை கண்டித்து பாஜக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாகை மாவட்டம் பூதங்குடி கிராமத்தில் வெட்டாற்றின் குறுக்கே கடல் நீர் உட்புகுவதை தடுக்கும் வகையில், கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் புதிய கடைமடை தடுப்பணை கட்டும் பணிகள் நடைபெற்றன. ஆட்சி மாற்றம் காரணமாக, இந்த தடுப்பணை கடற்கரையில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள உத்தமசோழபுரத்தில் கட்டப்படுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தடுப்பணையை பூதங்குடியில் கட்ட வலியுறுத்தியும் பூதங்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், அவர்களுக்கு ஆதரவாக, பாஜக தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாகூர் அடுத்த வாஞ்சூர் ரவுண்டானா அருகே பாஜக மாவட்ட தலைவர் விஜேந்திரன் தலைமையில், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.