ஏழைகளின் ஆப்பிள் என அழைக்கப்படும் பேரிக்காய் சாகுபடி புதிய வகை நோய்த்தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். கொடைக்கானலைச் சுற்றியுள்ள கிராமங்களில் நடைபெறும் பேரிக்காய் சாகுபடி குறித்தும், அதில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் குறித்தும் இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கோடை சீசன் தொடங்கியிருக்கும் நிலையில், ஏழைகளின் ஆப்பிள் என்று அழைக்கப்படும் பேரிக்காய் சீசனும் தொடங்கியுள்ளது. மலைப்பிரதேசங்களில் மட்டுமே அதிகமாக விளையும் பேரிக்காய் கொடைக்கானல் பகுதியின் முக்கிய விவசாயமாக விளங்கி வருகிறது.
பள்ளங்கி, வில்பட்டி, பிரகாசபுரம், செண்பகனூர், பெரும்பல்லம் என பல்வேறு பகுதிகளில் பேரிக்காய் சாகுபடியே பிரதான விவசாயமாக விளங்கி வருகிறது. அத்தகைய பேரிக்காய் விவசாயம் புதிய வகை நோய்த்தாக்குதலுக்கு உள்ளாகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
நாட்டுப் பேரி, ஊட்டி பேரி, வால் பேரி எனப் பேரிக்காய்களிலும் பல வகை உண்டு. பல்வேறு வகைகளில் சாகுபடி செய்யப்படும் பேரிக்காய்களுக்கு வேளாண்மைத்துறை சார்ந்து எந்தவித ஆலோசனையும் கொடுப்பதில்லை என்ற புகார் எழுந்துள்ளது. அதன் காரணமாகப் பேரிக்காய், இலைகள் மற்றும் மரத்தின் கிளைகளில் புதுவகை நோய்த்தாக்குதல் ஏற்பட்டிருப்பதால் சாகுபடி பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு கிலோ 50 முதல் 60 ரூபாய் வரை விற்கப்பட்ட பேரிக்காய் நடப்பாண்டில் 40 ரூபாய்க்குக் கீழ் சென்றிருப்பதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்
கடந்த ஆண்டு சிறிதளவு தென்பட்ட நோய்த்தாக்குதல் நடப்பாண்டில் மரம் முழுவதும் பரவியிருப்பதால் விளைச்சல் பெருமளவு பாதிக்கப்பட்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
அதோடு அடுத்தடுத்த ஆண்டுகளில் பேரிக்காய் விவசாயம் நடைபெறுமா என்ற சந்தேகமும் விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது. அழியும் தருவாயில் இருக்கும் பேரிக்காய் விவசாயத்தைப் பாதுகாக்கவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திடவும், மற்ற விவசாயத்திற்கு வழங்கப்படும் ஆலோசனைகளைப் போலப் பேரிக்காய் சாகுபடிக்கும் வேளாண்மைத்துறை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது