80 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் அண்டார்டிகாவில் ஓடிய மிகப்பெரிய ஆறுகளின் அடையாளங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பண்டைய ஆறுகள் மெதுவாக அரிக்கப்பட்டதற்கான ஆதாரங்களையும் தடயங்களையும் கண்டறிந்துள்ளனர். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பை இனி பார்க்கலாம்.
பூமியின் தெற்கு பகுதியில் அமைந்திருக்கும் அண்டார்டிகா, உலகின் தென் துருவம் என்றும் அழைக்கப்படுகிறது. சூரியவெப்பம் மிகக் குறைந்த அளவே, இந்தக் கண்டத்தில் வந்து சேர்கிறது. அண்டார்டிகாவுக்குப் புவியியல் ரீதியாக நிரந்தர எல்லைகள் அல்லது நிலையான அளவு கிடையாது. உலகின் ஐந்தாவது பெரிய கண்டமாக இருந்தாலும், அதன் சரியான அளவு பருவக் காலத்தைப் பொறுத்து மாறுபடும்.
கோடையில், அமெரிக்காவின் அளவில் பாதியாக இருக்கும் அண்டார்டிகாவின் பரப்பளவு, குளிர்காலத்தில் இரு மடங்குக்கு மேல் அதிகமாகும். அண்டார்டிகாவின் நிலப்பரப்பில் 98 சதவீதம் பனியால் மூடப்பட்டுள்ளது. மேலும் உலகின் மொத்த நன்னீரில் சுமார் 70 சதவீதம் அண்டார்டிகாவில் உறைந்துள்ளது.
அண்டார்டிகாவில் நிரந்தரமாக யாரும் முழுநேரமாக வசிப்பதில்லை. எனவே அண்டார்டிகாவில் எந்த நாடுகளும் இல்லை. அரசுகளும் இல்லை. ஒரு சிறப்பு சர்வதேச ஒப்பந்தத்தின் படி, அமைதியான நோக்கத்துக்காக அண்டார்டிகாவை எந்த நாட்டைச் சேர்ந்த மக்களும் ஆராய்ச்சிக்காகப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
பல்வேறு வகையான ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் பல நாடுகளின் விஞ்ஞானிகள் மட்டுமே அண்டார்டிகாவில் தங்கிச் செல்கிறார்கள். அண்டார்டிகாவில் 60 க்கும் மேற்பட்ட அறிவியல் ஆராய்ச்சி நிலையங்கள் இயங்குகின்றன. இந்த ஆராய்ச்சி நிலையங்களின் சுமார் ஐந்தாயிரம் விஞ்ஞானிகள் இருக்கின்றனர்.
அண்டார்டிகாவில், பண்டைய ஆறுகள் விட்டுச் சென்ற செதுக்கல்களைக் கண்டுபிடித்துள்ள விஞ்ஞானிகள், அதுகுறித்த ஆய்வுக் கட்டுரையை Nature Geoscience இதழில் வெளியிட்டுள்ளனர். அதன்படி கிழக்கு அண்டார்டிகாவில் 80 மில்லியன் முதல் 34 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பனிக்கட்டிக்கு அடியில் பெரிய, தட்டையான மேற்பரப்புகள் உருவாகின என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கால நிலை மாற்றம் காரணமாக அடுத்தடுத்த ஆண்டுகளில், பனிக்கட்டி எவ்வளவு உருகக்கூடும் என்பதைத் துல்லியமாகக் கணிக்க, மற்றும் பனிக்கட்டியின் அடிப்பகுதியில் ஏற்படும் மாற்றங்களைப் புரிந்துகொள்வது அவசியம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த பண்டைய மேற்பரப்புகள் உருவானது எப்படி என்பதையும், பனிக்கட்டியின் ஓட்டத்தைத் தீர்மானிப்பதில் இவற்றின் பங்கு என்ன? இந்தக் கேள்விகளுக்கான விடையைக் கண்டுபிடிக்க இந்த ஆய்வு உதவியுள்ளது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
கண்டறிந்த தட்டையான மேற்பரப்புகள் 30 மில்லியன் ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பீட்டளவில் அப்படியே உயிர்வாழ இருந்ததாகவும், இதனால், பனிப்பாறையின் நிலப்பரப்பை அரிப்பதற்குப் பதிலாகப் பாதுகாத்துள்ளதாகவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
கிழக்கு அண்டார்டிக் கடற்கரையின் 3,500 கிலோமீட்டர் பகுதியில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில், பல இடங்களில் தட்டையான விரிவுகள் மற்றும் ஆழமான பள்ளங்கள் இருந்ததாகவும் தெரிய வந்துள்ளது.
அதாவது, கிழக்கு அண்டார்டிக் பனிப்படலம் விரிவடையும் போது உருகும் நீரால், பள்ளங்கள் உருவாகியதாகக் கூறும் ஆய்வறிக்கை, கிழக்கு அண்டார்டிக் கடற்கரை இருப்பதற்கு முன்பே உருவாகியுள்ளதாக உறுதிப் படுத்தியுள்ளது.
இந்தக் கண்டுபிடிப்பு, அண்டார்டிகாவை மையப்படுத்தி நடக்கும் ஆய்வுகளில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.