சென்னையின் முதல் அடையாளமாகத் திகழ்ந்த விக்டோரியா அரங்கத்தைப் பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. சென்னையின் புதிய அடையாளமாக மாறப்போகும் விக்டோரியா அரங்கம் குறித்தும் அங்கு நடைபெற்று வரும் புதுப்பிப்பு பணிகள் குறித்தும் இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
பொதுநலனில் ஆர்வம் கொண்ட சென்னை மாநகரப் பகுதியைச் சேர்ந்த செல்வந்தர்கள் ஒன்றுகூடி மாநகருக்கான நிகழ்ச்சி அரங்கம் ஒன்றை அமைக்க 1882 ஆம் ஆண்டில் திட்டமிட்டனர். அதன் தொடர்ச்சியாகச் சென்னை ஜார்ஜ் டவுன் பகுதியில் 3.14 ஏக்கர் பரப்பளவு இடத்தில் 2 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் செலவில் இந்தோ -சாரசனிக் கட்டடக் கலை முறையில் அரங்கம் கட்டி முடிக்கப்பட்டது. அந்தக் கால கட்டத்தில் இங்கிலாந்து ராணியின் பொன்விழாவும் இங்குக் கொண்டாடப்பட்ட நிலையில் பின்னாளில் அது விக்டோரியா அரங்கமாகவே மாறியது
மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திரபோஸ் போன்ற தலைவர்கள் பங்கேற்று சிறப்புரை ஆற்றிய இந்த மஹால், காலப்போக்கில் பராமரிப்பின்றியும், கட்டுமானம் சேதமடைந்தும் காணப்பட்டது. பயன்பாடற்ற நிலையில் இருந்த விக்டோரியா அரங்கத்தைப் புதுப்பிக்கும் பணிகள் முழுவீச்சுடன் தற்போது நடைபெற்று வருகிறது. விக்டோரியா அரங்கத்தின் பழமை மாறாமல் புனரமைக்க மும்பையைச் சேர்ந்த சவானி ஹெரிடேஜ் நிறுவனம் இப்பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
மதராஸ் மாகாணத்தின் முதல் திரைப்படம் திரையிடப்பட்ட அரங்கம் என்பதில் தொடங்கி பல்வேறு வரலாற்றுச் சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்றதற்கான அடையாளமாகத் திகழும் விக்டோரியா அரங்கத்தைப் புதுப்பிப்பதில் சென்னை மாநகராட்சி கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.
நுண்ணிய வேலைப்பாடுகளுடன் கூடிய U வடிவ ஆர்ச் கொண்ட கண்ணாடிக் கதவுகள், பிரிட்டிஷ் கால படிக்கெட்டுகள், பேரிடர்களில் பாதிப்பு ஏற்படாத வகையில் வசதிகள் என பல்வேறு சிறப்பு அம்சங்கள் பழங்கால விக்டோரியா அரங்கத்தை மீண்டும் நம் கண்முன்னே கொண்டு வருகிறது.
தரைதளத்தில் சென்னையின் பெருமைகள் அடங்கிய அருங்காட்சியகம், பழைய திரைப்படங்களைத் திரையிடும் அரங்கம், கூட்டங்கள் நடத்துவதற்கென தனி அரங்கம் என பல்வேறு சிறப்பு அம்சங்களும் விக்டோரியா அரங்கில் தயாராகி வருகின்றன
விக்டோரியா அரங்கத்தின் மேற்கூரைகள் முழுவதுமாக நீக்கப்பட்டு, பர்மா தேக்குகளைக் கொண்டு புதிய கூரைகள் அமைக்கப்பட்டுள்ளன. எத்தகைய மழைக் காலத்திலும் தண்ணீர் உள்ளே நுழையாத வகையில் கட்டடம் தயாராகி வருகிறது.
இடப்பக்கம் சென்னை மாநகராட்சியின் ரிப்பன் மாளிகை வலப்பக்கம் சென்ட்ரல் ரயில் நிலையம் என இவை இரண்டிற்கும் இடையில் பிரம்மாண்டமாகத் தயாராகி வரும் இந்த விக்டோரிய அரங்கம் சென்னையின் அடையாளமாக மீண்டும் உருவெடுக்க உள்ளது.