விஷ்ணு திட்டத்தின் கீழ் 1,500 கிலோமீட்டர் தூரம் சென்று தாக்கக் கூடிய அதிநவீன ஹைப்பர்சோனிக் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது. இந்த வெற்றி, இந்திய -பசிபிக் மண்டலத்தில், தனது ஆதிக்கத்தை வலுப்படுத்துவதில் இந்தியாவின் மைல்கல்லாகும். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
ப்ராஜெக்ட் விஷ்ணு என்பது, இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு மூலம் உருவாக்கப்பட்ட ஒரு ஹைப்பர்சோனிக் ஏவுகணை தொழில்நுட்ப மேம்பாட்டுத் திட்டமாகும். இது ஒரு ரகசியத் திட்டமாகும். இந்த திட்டம் – ஹைப்பர்சோனிக் கிளைடு வாகனங்கள், கப்பல் ஏவுகணைகள் மற்றும் ஹைப்பர்சோனிக் எதிர்ப்பு பாதுகாப்பு தளங்கள் உட்பட பன்னிரண்டு வகையான ஏவுகணைகளை உருவாக்க பணிசெய்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, ET-LDHCM ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக முடித்துள்ளது. இது அனைத்து இந்திய ஏவுகணை அமைப்புகளையும் விட பன்மடங்கு வேகமும் திறனும் உடையதாகும். இந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணை சுமார் 1500 கிலோமீட்டர் வரை சென்று தாக்கும் திறன் கொண்டது.
ஒலியின் வேகத்தை விட எட்டு மடங்கு அதிகமான வேகத்தில் செல்லும் என்று கூறப்பட்டுள்ளது. உயரத்தைப் பொறுத்து மணிக்கு சுமார் 10,000 முதல் 11,000 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இது பிரம்மோஸ் குரூஸ் ஏவுகணையை விடக் கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. 2,000 கிலோ வரை எடையுள்ள வெடி பொருட்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்டது. மேலும் அணு ஆயுதங்களையும் எடுத்துச் செல்லும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது.
பாரம்பரிய பாலிஸ்டிக் ஏவுகணைகளுக்கு மாறாக, ET-LDHCM ஏவுகணை மிகக் குறைந்த உயரத்தில் பறக்கும். மேலும் இதன் மேம்பட்ட சூழ்ச்சித்திறன், அதன் பறக்கும் பாதையை நடுவில் மாற்ற அனுமதிக்கிறது.
மேம்பட்ட வெப்ப-எதிர்ப்பு பொருட்கள் மற்றும் வெப்பத் தடுப்பு பூச்சுகளால் கட்டமைக்கப்பட்ட இந்த ஏவுகணை 2,000°C வரை வெப்பநிலையைத் தாங்கும் திறன் கொண்டது. பாதுகாப்பு வட்டாரங்களில் தகவலின் படி, இந்த ஏவுகணையின் வேகம் மற்றும் தப்பிக்கும் சூழ்ச்சித் திறனால், தற்போது உலகில் உள்ள IRON DOME, S-400 & Patriot போன்ற வான்பாதுகாப்பு அமைப்புகளாலும் இந்த ஏவுகணையை இடைமறிக்க முடியாது.
ET-LDHCM ஏவுகணையின் மையத்தில் ஒரு ஸ்க்ராம்ஜெட் என்ற சூப்பர்சோனிக் எரிப்பு ராம்ஜெட் இன்ஜின் உள்ளது. இது உந்துவிசை தொழில்நுட்பத்தில் ஒரு பெரிய திருப்புமுனையாகும். இது ஏவுகணை எடையைக் குறைப்பது மட்டுமல்லாமல், நீண்ட தூரங்களுக்கு ஹைப்பர்சோனிக் வேகத்தைத் தக்கவைக்கவும் உதவுகிறது.
மேலும்,இது எரிபொருள் எரிப்பு, வளி மண்டல ஆக்சிஜனை பயன்படுத்துகிறது. இது நீண்ட நேரத்துக்கு,ஹைப்பர்சோனிக் ஏவுகணையின் வேகத்தைக் கடைப்பிடிக்கிறது. நெகிழ்வுத் தன்மையே இந்த ஏவுகணையின் சிறப்பம்சமாகும். இது நிலத்தில் உள்ள ஏவுதளங்கள், கடற்படைக் கப்பல்கள் மற்றும் விமானங்களில் இருந்து செலுத்த முடியும். இது முப்படைகளுக்கும் ஏற்றதாக உள்ளது.
இந்த Hypersonic glide vehicles 2027, 2028ம் ஆண்டுக்குள் இந்திய ஆயுதக் களஞ்சியத்தில் சேரக்கூடும் என்றும், 2030 ம் ஆண்டுக்குள் முழு அளவிலான பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முழுவதும் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட இந்த அதிநவீன ஹைப்பர் சோனிக் ஏவுகணை, தெற்காசிய இராணுவ களத்தில் ஒரு GAME CHANGER ஆக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்தியா நாளைய போர்க்களத்தில் களமிறங்கியுள்ளது. ஆயுத களஞ்சியத்தில் அதிநவீன ஏவுகணை இருப்பதே உலக நாடுகளுக்கு ஒரு செய்தி தான்.
இனி அச்சுறுத்தல்களுக்கு எல்லாம் இந்தியா பதில் சொல்லப் போவதில்லை. அடுத்து வருவதற்குத் தயாராகவே உள்ளது என்பது தான் அந்த செய்தி.