இந்தியாவையே கதிகலங்கச் செய்த கார் திருடனை, புதுச்சேரி அருகே தமிழக காவல்துறையினர் கைது செய்துள்ளது மிகப்பெரிய வெற்றியாகக் கருதப்படுகிறது. 20 ஆண்டுகளுக்கும் மேலாகச் சொகுசு கார்களை குறிவைத்துத் திருடிய நபர், தமிழக போலீசாரிடம் சிக்கியது எப்படி? என்பதை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.
தொப்பி மற்றும் முகக்கவசத்துடன் எந்த வித அலட்டலும் இல்லாமல் வந்து பல லட்சம் மதிப்புள்ள சொகுசு காரை திருடிச் செல்லும் இவரின் பெயர் சத்யேந்திர சிங் ஷெகாவத்…. ராஜஸ்தானைச் சேர்ந்த இந்த நபர் தான் இந்தியாவின் முக்கிய கார் திருடனாக காவல்துறையினரால் அறியப்படுகிறார்.
கடந்த ஜூன் மாதம் 10ஆம் தேதி சென்னை அண்ணா நகர் கதிரவன் காலனியில் இருந்து திருடப்பட்ட Toyotta fortuner காரின் உரிமையாளர் எத்திராஜ் ரத்தினம் என்பவர், சிசிடிவி காட்சி ஆதாரங்களுடன் காவல்துறையில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த சூழலில் புதுச்சேரியில் மேலும் ஒரு சொகுசு காரை திருட முயன்ற போது சத்யேந்திர சிங் ஷெகாவத்தை சுற்றி வளைத்து மடக்கினர்.
விசாரணையில் இந்த நபர் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று, Toyotta ஷோருமில் சர்வீஸ்-க்காக வரும் கார்களை குறிவைத்து, அதில் GPS tracker-ஐ வைத்துக் கண்காணித்து பின்னர் இரவு நேரத்தில் அந்த காரை திருடிச் செல்வது தெரியவந்தது. ஒரு காரை திருடினால் அதனை 4 நாட்களில் சொந்த ஊரான ராஜஸ்தானிற்கு கொண்டு சென்று பின்னர் அதனை நேபாள் அல்லது வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் இருப்பவர்களிடம் விற்று விடுவதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதனிடையே, கார்களை திருடும் சத்யேந்திர சிங்கிற்கும், டொயோட்டா ஷோரூம் பணியாளர்களுக்கும் ரகசிய தொடர்பு இருப்பதாகக் காரை பறிகொடுத்த எத்திராஜ் ரத்தினம் குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த 20 ஆண்டுகளாக கார் திருடுவதையே பிரதான தொழிலாகச் செய்து வரும் சத்யேந்திர சிங், இத்தனை நாட்களாக காவல்துறையிடம் சிக்காமல் தப்பியது எப்படி என்ற கேள்வியும் எழாமல் இல்லை…. இருந்த போதிலும், தமிழக சைபர் கிரைம் காவல்துறையின் ஒத்துழைப்பு இல்லாமல் சத்யேந்திர சிங்-ஐ கைது செய்திருக்க முடியாது என்று கூறியுள்ளார் புகார்தாரர் எத்திராஜ் ரத்தினம்.