மதபோதகர் தாக்கப்பட்ட வழக்கில் முன்னாள் எம்பி ஞானதிரவியத்திற்கு ஆறு மாதங்களாகச் சம்மன் வழங்காத காவல்துறைக்குச் சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
கடந்த 2023ஆம் ஆண்டு பாளையங்கோட்டை சிஎஸ்ஐ தேவாலய அலுவலகத்துக்குச் சென்ற மதபோதகர் காட்ஃப்ரே நோபிள் தாக்கப்பட்ட புகாரில் முன்னாள் எம்பி ஞானதிரவியத்தின் ஆதரவாளர்கள் 33 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க நெல்லை நீதிமன்றத்திற்கு உத்தரவிடக்கோரி மதபோதகர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், தாக்குதல் வழக்கு தொடர்பான ஆவணங்களைச் சமர்ப்பிக்க நெல்லை நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, முன்னாள் எம்பி ஞானதிரவியத்திற்கு எதிரான வழக்கின் ஆவணங்கள் உயர்நீதிமன்ற பதிவுத்துறையின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டது.
அதில், கடந்த நவம்பர் மாதமே ஆஜராகக்கூறி, ஞானதிரவியத்திற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக நெல்லை நீதிமன்ற ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, ஆறு மாதங்களாகச் சம்மன் வழங்காதது ஏன் என்றும், ஆளுங்கட்சியைச் சேர்ந்த எம்பி, எம்எல்ஏக்களுக்கு காவல்துறையினர் சம்மன் வழங்க மாட்டீர்களா எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.
ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு எதிராகச் சம்மன் வழங்க இயலாது எனத் தெரிவித்துவிட்டால், சம்மன் அனுப்புவதற்காகத் தனிப்பிரிவை உருவாக்க நேரிடும் எனவும் நீதிபதி எச்சரிக்கை விடுத்தார்.
மேலும், முன்னாள் எம்பி ஞானதிரவியத்திற்கு சம்மன் அனுப்பியது குறித்தும், அவருக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாகவும் அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.