ஈரோடு மாவட்டம் கூகலூரில் பள்ளிக்கட்டடத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததற்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், தமிழகம் முழுவதுமே, அரசுப் பள்ளிக் கட்டிடங்களின் மேற்கூரை இடிந்து விழுவது, தினசரி செய்தியாகி வருவதாக விமர்சித்துள்ளார்.
பள்ளிக் குழந்தைகளுக்கான கட்டிடங்கள் கட்டுவதில் கூட, திமுக அரசு அலட்சியமாகச் செயல்படுவதைச் சற்றும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ள அண்ணாமலை, அரசுப் பள்ளிகளில் பயில வரும் குழந்தைகள் உயிர், திமுக அரசுக்கு அத்தனை இளக்காரமாகப் போய்விட்டதா? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
விளம்பர ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், இதுவரை இடிந்து விழுந்த பள்ளிக் கட்டடங்கள் கட்டிய ஒப்பந்ததாரர்கள் யார், அவர்கள் மீது திமுக அரசு எடுத்த நடவடிக்கை என்ன, என்பதைப் பொதுமக்களுக்கு வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.