மயிலாடுதுறை மதுவிலக்கு பிரிவு டிஎஸ்பி சஸ்பெண்ட் செய்யப்பட்ட அடுத்த தினமே கள்ளச் சந்தையில் படுஜோராக மதுபானம் விற்பனை செய்யப்படும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மயிலாடுதுறை மதுவிலக்கு காவல்துறை டிஎஸ்பியாக இருந்த சுந்தரேசன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இவர், பதவி ஏற்றதிலிருந்து, மயிலாடுதுறையில் சட்டவிரோதமாகச் செயல்பட்ட 23 பார்களை பூட்டி சீல் வைத்ததோடு, பல்வேறு அதிரடி நடவடிக்கைகளையும் எடுத்து வந்தார். இது ஆளுங்கட்சி நிர்வாகிகள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
டிஎஸ்பியாக இருந்த சுந்தரேசனை மாற்றுவதற்கு பல்வேறு முயற்சிகளை ஆளுங்கட்சியினர் செய்து வந்த நிலையில், காவல்துறை உயர் அதிகாரிகளும், அவருக்கு பல்வேறு வகையில் அழுத்தம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து சுந்தரேசன் பேட்டியளித்ததை அடுத்து, அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதற்காக நீண்ட நாட்களாகக் காத்திருந்த திமுகவின் சிலர் பூட்டி கிடந்த சட்டவிரோத பார்களை மீண்டும் திறந்தனர்.
டிஎஸ்பி சஸ்பெண்ட் செய்யப்பட்ட அடுத்த நாளே, சட்டவிரோத மதுபான விற்பனை மீண்டும் படுஜோராக நடைபெறுவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
சித்தர்காடு பகுதியில் சட்டவிரோத மதுபான விற்பனை தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.