ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட சேலம் பனைமரத்துப்பட்டி ஏரியை போதிய பராமரிப்பின்றி பாலைவனமாகக் காட்சியளிக்கிறது. ஏரியைத் தூர்வார ஒதுக்கப்பட்ட தொகையில் முறைகேடு நடந்திருப்பதாகவும் விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
1911ம் ஆண்டு சேலம் மாவட்டம் பனைமரத்துப்பட்டியில் 2 ஆயிரத்து 400 ஏக்கர் பரப்பளவில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது தான் இந்த ஏரி. ஒரு காலத்தில் சேலம் மாநகரின் குடிநீர் ஆதாரமாக விளங்கி வந்த இந்த பனைமரத்துப்பட்டி ஏரி தற்போது கருவேலமரங்களின் கூடாரமாக மாறி வருகிறது.
ஏரியை முறையாகத் தூர்வாரி பராமரிக்க வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கைக்குச் செவிசாய்க்காத அதிமுக, திமுக அரசுகளால் ஏரியிலிருந்து குடிநீர் எடுப்பது முற்றிலுமாக நிறுத்தப்பட்டிருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.
சேலம் மாநகரின் குடிநீர் தேவையை மட்டுமின்றி பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களுக்குப் பாசன வசதியாகவும் விளங்கிவந்த பனைமரத்துப்பட்டி ஏரி தற்போது பாலைவனமாகக் காட்சியளிக்கிறது. இந்த ஏரியைத் தூர்வார கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒதுக்கப்பட்ட 97 கோடி ரூபாயில் எந்த பணிகளும் நடைபெறாததால், அந்த தொகை எங்கே சென்றது என்ற கேள்வியை விவசாயிகள் எழுப்புகின்றனர்.
பனைமரத்துப்பட்டி ஏரியைத் தூர்வாருவதற்காக ஒதுக்கப்பட்ட தொகையை முறையாகப் பயன்படுத்தித் தூர்வாரி மீண்டும் பயன்பாட்டிற்குக் கொண்டுவர வலியுறுத்திப் போராடிய விவசாயிகள் மீது வழக்குப்பதிவு செய்வதையும், கைது செய்வதையுமே வாடிக்கையாகக் கொண்டிருப்பதாகவும் காவல்துறை மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குடிநீர் தேவைக்காகவும், பாசன வசதிக்காகவும் ஆங்கிலேயர்களால் அமைக்கப்பட்ட ஏரியை முறையாகப் பாதுகாக்கத் தவறியதால் விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் பயனற்ற நிலையில் காட்சியளிக்கிறது. இனியும் காலம் தாழ்த்தாமல் அரசு ஒதுக்கிய தொகையை முறையாகப் பயன்படுத்தி பனைமரத்துப்பட்டி ஏரியைத் தூர்வாரி பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.