குடியரசு துணைத் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ஜெகதீப் தன்கர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து குடியரசுத் தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில், உடல் நலத்தை முன்னிலைப்படுத்தவும், மருத்துவ காரணங்களுக்காகவும் பதவியை ராஜினாமா செய்வதாக கூறியுள்ளார்.
பதவிக் காலத்தில் குடியரசுத் தலைவர் தனக்கு அளித்த ஆதரவிற்கும்
பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்களுக்கும் நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.
பிரதமரின் ஒத்துழைப்பும், ஆதரவும் விலைமதிப்பற்றவை எனவும் குறிப்பிட்டுள்ளார். பதவியில் இருந்த காலத்தில் நிறைய கற்றுக் கொண்டதாக கூறியுள்ள ஜெகதீப் தன்கர்,
நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரிடம் இருந்தும் பெற்ற அரவணைப்பு, நம்பிக்கை மற்றும் அன்பு என்றும் தனது நினைவுகளில் நிலைத்திருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
மாபெரும் ஜனநாயகத்தில் குடியரசுத் துணைத் தலைவராக தனக்கு கிடைத்த விலைமதிப்பற்ற அனுபவத்திற்கு நன்றி கூறுவதாகவும், இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்தையும், முன்னெப்போதும் இல்லாத அதிவேக வளர்ச்சியையும் நேரில் கண்டு அதில் பங்கேற்றது தனது பாக்கியம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நமது நாட்டின் வரலாற்றில் மாற்றத்தை ஏற்படுத்தும் சகாப்தத்தில் பணியாற்றியது உண்மையான கெளரவம் என தெரிவித்துள்ள ஜெகதீப் தன்கர், மதிப்புமிக்க அலுவலகத்தை விட்டு வெளியேறும்போது பாரதத்தின் உலகளாவிய எழுச்சி மற்றும் தனித்துவமான சாதனைகள் குறித்து பெருமிதம் கொள்வதாகவும்
அதன் பிரகாசமான எதிர்காலத்தில் அசைக்க முடியாத நம்பிக்கையை வைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.