ஆரம்பாக்கத்தில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி இன்னும் கைது செய்யப்படாததை கண்டித்து பாஜக-வினர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், ஆரம்பாக்கத்தில் நடந்து சென்ற 4-ம் வகுப்பு பள்ளி மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் நடந்து 10 நாட்களுக்கு மேலாகியும் இன்னும் குற்றவாளியை கைது செய்ய முடியாமல் காவல்துறையினர் திணறி வருகின்றனர்.
இந்நிலையில், சிறுமிக்கு நீதி கேட்டும், குற்றவாளியை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் மாவட்ட பாஜக சார்பில் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது பாஜக-வினரை போலீசார் கைது செய்ய முயன்றதால், அவர்கள் சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையை மறித்து போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியது.
இதனிடையே, பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயாரும் போராட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது பேட்டியளித்த அவர், தனது மகள் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் தினமும் பல சித்ரவதைகளை அனுபவித்து வருவதாகவும் குற்றவாளியை காவல்துறை விரைந்து கைது செய்ய வேண்டும் எனவும் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார்.