திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடைபெற்று வரும் மண்டல பூஜைகளை முன்னிட்டு, அங்குக் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுமார் 7 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், கடந்த 7-ம் தேதி கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
தொடர்ந்து முருகப் பெருமானுக்கு மண்டல பூஜைகள் நடைபெற்று வரும் நிலையில், 15-ம் நாளான இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்குக் குவிந்தனர்.
அதிகாலை முதலே புனித நீராடி கோயிலுக்குள் நுழைந்த பக்தர்கள் சுமார் 7 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இதனால் சிறப்புத் தரிசனம், பொது தரிசனம், முதியோர்களுக்கான தரிசன வழி என அனைத்து பகுதிகளிலும் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.