விருதுநகரில் விதியை மீறிச் செயல்பட்ட 46 பட்டாசு ஆலைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலைகளில் தொடர்ந்து நடைபெற்று வரும் விபத்துக்களைத் தடுக்க, உரிய ஆய்வுகள் மேற்கொள்ளக் குழுக்கள் அமைத்து தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. ஆய்வின்போது விதி மீறல்கள் கண்டறியப்பட்டால் அந்த ஆலைகளை மூடுவது குறித்து அதிகாரிகள் முடிவெடுக்கலாம் எனவும் தீர்ப்பாயம் தனது உத்தரவில் தெரிவித்திருந்தது.
அதனடிப்படையில் கடந்த 14-ம் தேதி முதல் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கொண்ட 15 குழுக்கள் 400-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளில் ஆய்வு நடத்தினர்.
இந்நிலையில், ஆய்வில் விதியை மீறிச் செயல்பட்டதாகக் கண்டறியப்பட்ட 46 பட்டாசு ஆலைகளின் உரிமத்தைத் தற்காலிகமாக ரத்து செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆய்வு தொடர்பான அறிக்கையை மாவட்ட நிர்வாகம் வரும் 27-ம் தேதி தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் சமர்ப்பிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.