100 நாள் வேலை திட்டத்தில் தமிழ்நாட்டில் கடந்த 3 நிதியாண்டில் மட்டும் 19 ஆயிரம் போலி கணக்குகள் நீக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் விளக்கமளித்துள்ளது.
இதுகுறித்து மக்களவையில் உறுப்பினர் ஒருவர் எழுத்துப்பூர்வமாக எழுப்பிய கேள்விக்கு மத்திய ஊரக வளர்ச்சித்துறை இணை அமைச்சர் கமலேஷ் பஸ்வான் பதிலளித்துள்ளார்.
அதில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பை செயல்படுத்தும் பொறுப்பு மாநில அரசிடம் உள்ளது என்றும் இத்திட்டத்தில் ஏதேனும் முறைகேடுகள் இருந்தால் பிரச்னையின் தீவிரத்தின் அடிப்படையில் குற்றவியல் நடவடிக்கை எடுக்கலாம் எனவும் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளை கேட்டுக் கொண்டுள்ளதாக கமலேஷ் பஸ்வான் கூறியுள்ளார்.
அதன்படி நாடு முழுவதும் 33 மாநிலங்களில் கடந்த 3 நிதியாண்டுகளில் 11 லட்சத்து 7 ஆயிரத்து 814 போலி கணக்குகளும்,தமிழகத்தில் மட்டும் 19 ஆயிரத்து 470 போலி கணக்குகளும் நீக்கப்பட்டுள்ளதாக மத்திய இணை அமைச்சர் வழங்கி உள்ள புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.