சிறுவன் கடத்தலில் அரசுக்கு சொந்தமான காவல்துறை வாகனத்தை பயன்படுத்தியது தொடர்பான வழக்கில் விசாரணை முறையாக நடைபெறவில்லை என்றால் சிபிஐக்கு மாற்ற நேரிடுமென சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் ஜாமீன் கோரி வனராஜ், மணிகண்டன், கணேசன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, உச்ச நீதிமன்றம் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டிருந்தும் ஏடிஜிபிக்கு சம்மன் அனுப்பி இதுவரை ஏன் விசாரணை நடத்தவில்லை என நீதிபதி ஜெயசந்திரன் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளிக்கப்படாததால், சிபிசிஐடி இந்த வழக்கை விசாரிக்க தகுதியற்ற நிலையில் இருப்பதாக நீதிபதி அதிருப்தி தெரிவித்தார். வழக்கில் சிபிசிஐடி முறையாக விசாரணை நடத்தவில்லை என்றால் விசாரணையை சிபிஐக்கு மாற்ற உத்தரவிட நேரிடும் என்றும் நீதிபதி எச்சரித்தார்.
இதையடுத்து எந்த உத்தரவும் பிறப்பிக்க வேண்டாம் எனவும், உரிய விளக்கத்துடன் வருவதாகவும் கூறி சிபிசிஐடி தரப்பில் கால அவகாசம் பெறப்பட்டது. அதன்பின், சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஏடிஜிபி நாளை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, இந்த வழக்கின் விசாரணை நிலை குறித்து, தற்போதைய விசாரணை அதிகாரி ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தார்.