கோவையில் திமுக கட்சியைச் சேர்ந்த நபரால் ஆக்கிரமிப்பு செய்ய முயன்ற ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை மாநகராட்சி அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
கோவை மாநகராட்சி போத்தனூர் கருணாநிதி நகர், நகர ஊரமைப்புத் துறையால் கடந்த 1972 ஆண்டு 4.47 ஏக்கருக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
இதில் 41மனைகள் மற்றும் 10% பொது ஒதுக்கீட்டிற்காக பொதுப் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டிருந்தது. பொதுப் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட சுமார் 35 சென்ட் இடத்தில் 7 சென்ட் நிலத்தில் ஆயிரத்து 526 சதுரடி பரப்பளவில் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
மீதமுள்ள ஆயிரத்து 519 சதுரடி காலி இடத்திற்குக் கடந்த வாரம் திமுக கட்சியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் கம்பி வேலி போடுவதற்கு வந்த போது அப்பகுதியினரால் தடுத்து நிறுத்தப்பட்டது.
இதையடுத்து மாநகராட்சி ஆணையாளர் உத்தரவின் பேரில் போத்தனூர் போலீசார் உதவியுடன் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்பு கட்டிடத்தை அதிகாரிகள் இடித்து அகற்றினர்.
53 வருடங்களுக்குப் பிறகு பொதுப் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்திலிருந்த ஆக்கிரமிப்பை அகற்றி மாநகராட்சி அதிகாரிகள் மீட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.