தங்களுடைய கடவுச்சொல்லை மேல் அதிகாரிகள் பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்டதாக மதுரை மாநகராட்சியில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பில் கலெக்டர்கள் குற்றம்சாட்டினர்.
மதுரை மாநகராட்சியில் 150 கோடி ரூபாய்க்கும் மேலாக மோசடி செய்து அரசுக்கு இழப்பு ஏற்படுத்திய சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், முன்னாள் உதவி ஆணையர் உட்பட 10 அதிகாரிகள் கைது செய்யப்பட்டும், 10 மாநகராட்சி ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அண்ணாநகர் பகுதியில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பில் கலெக்டர்கள் ஆலோசானை நடத்தினர். அப்போது பேசிய அவர்கள் ஒரு கடவுச்சொல்லைப் பயன்படுத்தி ஒரு வரிகுறைப்பு மட்டுமே செய்யப்பட முடியும் என்பதால் மேல் அதிகாரிகள் தங்களுடைய கடவுச்சொல்லை வற்புறுத்திப் பெற்றதாகத் தெரிவித்தனர்.
இது தொடர்பாக புகாரளிக்கக்கூடாது என உயர் அதிகாரிகள் தெரிவித்ததாகவும், 5 லட்ச ரூபாய் வரி செலுத்த வேண்டிய இடத்தில் 50 ஆயிரம் ரூபாய் மட்டும் வரி வசூலானதை மேல் அதிகாரிகள் ஏன் கண்டுகொள்ளவில்லை எனவும் கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து பேசிய அவர்கள் தவறு செய்யாத அப்பாவி ஊழியர்களை மட்டும் பணியிடை நீக்கம் செய்தது ஏற்புடையது அல்ல எனவும் பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தனர்.