கடந்த ஆறு மாதங்களில், ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டில் இந்தியா மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளது. அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் சரிவைச் சந்தித்து வரும் நிலையில், பாஸ்போர்ட் சக்தி குறியீட்டு பட்டியலில் இந்தியாவின் முன்னேற்றம் குறிப்பிடத்தக்கச் சாதனையாகப் பார்க்கப்படுகிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
பயணம் என்பது நவீன வாழ்க்கையின் இன்றியமையாத பகுதியாக மாறி விட்டது. பயணம் என்பது வெறும் ஆடம்பரம் என்ற நிலை இப்போது முற்றிலும் மாறிவிட்டது. பொழுதுபோக்குச் சுற்றுலா என்பதைத் தாண்டி, ஓய்வு, வணிகம், கல்வி, மருத்துவம் மற்றும் கலாச்சார ஆய்வு என பயணங்கள் அதிகரித்துள்ளன.
உள்நாட்டுப் பயணங்களை விடவும் வெளிநாட்டுப் பயணங்கள் ஒவ்வொருவர் வாழ்விலும் தவிர்க்க முடியாத அங்கமாகி உள்ளது. ஒருவர் எவ்வளவு தூரம், எவ்வளவு சுதந்திரமாக உலகைச் சுற்றிவர முடியும் என்பதை வடிவமைப்பதில் பாஸ்போர்ட்டின் சக்தி முக்கிய பங்கு வகிக்கிறது.
உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலை லண்டனைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் நிறுவனம் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. விமானத் துறையில் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், விசா இல்லாமல் அதிக நாடுகளுக்குச் செல்ல எந்த பாஸ்போர்ட் உதவுகிறது என்பதை வைத்து இந்த பாஸ்போர்ட் சக்தி குறியீட்டுப் பட்டியல் உருவாக்கப் படுகிறது.
உலகின் 227 நாடுகளில், 193 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கக்கூடிய உலகின் மிகச் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டாக சிங்கப்பூர் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. 25 நாடுகளுக்கு மட்டுமே விசா இல்லாமல் செல்ல முடிந்த நிலையில், ஆப்கானிஸ்தான் உலகின் மிக மோசமான பாஸ்போர்ட்டாக உள்ளது.
ஜப்பான் மற்றும் தென் கொரியா 190 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லமுடியும் என்ற நிலையில், இரண்டாவது இடத்தைப் பகிர்ந்து கொள்கின்றன. டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, அயர்லாந்து, இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகிய ஏழு ஐரோப்பிய யூனியன் நாடுகளின் பாஸ்போர்ட், மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்த பாஸ்போர்ட் மூலம் 189 இடங்களுக்கு விசா இல்லாமல் செல்லமுடியும்.
நான்காவது இடத்தில் ஆஸ்திரியா, பெல்ஜியம், லக்சம்பர்க், நெதர்லாந்து, நார்வே, போர்ச்சுகல் மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகள் உள்ளன. இந்த நாடுகளின் பாஸ்போர்ட் மூலம் 188 இடங்களுக்கு விசா இல்லாமல் செல்லமுடியும். நியூசிலாந்து, கிரீஸ் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள், இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளன.
முந்தைய நிலையில் இருந்து, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து தலா ஒரு இடம் பட்டியலில் பின்தங்கியுள்ளன. இங்கிலாந்து ஆறாவது இடத்துக்கும், அமெரிக்கா பத்தாவது இடத்துக்கும் சரிந்துள்ளது. இது அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தின் உள்நாட்டுக் கொள்கைகளால் பாதிக்கப்பட்ட இடம்பெயர்வு காரணமாக ஏற்பட்ட விளைவாகும் என்று ஹென்லி & பார்ட்னர்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் ஜூர்க் ஸ்டெஃபென் கூறியுள்ளார்.
அமெரிக்கா முதல் முறையாக முதல் 10 நாடுகளிலிருந்து வெளியேறும் அபாயத்தில் உள்ளதாக ஹென்லி & பார்ட்னர்ஸ் அறிக்கை தெரிவிக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் 34 இடங்கள் முன்னேறி, ஐக்கிய அரபு அமீரகம், எட்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. மேலும் இத்தனை குறுகிய காலத்தில் முதல் 10 இடங்களுக்குள் நுழைந்த ஒரே நாடு என்ற பெருமையைப் பெற்றுள்ளது ஐக்கிய அரபு அமீரகம்.
2015-ல் 94-வது இடத்தில் இருந்த சீனா 2025-ல் 34 இடங்கள் முன்னேறி 60வது இடத்தில் உள்ளது. உலகளாவிய பாஸ்போர்ட் சக்தி குறியீட்டில், 5 இடங்கள் முன்னேறி 77வது இடத்தைப் பிடித்து ஒரு வரலாற்றுச் சாதனையை இந்தியா படைத்துள்ளது. இப்போது விசா இல்லாமல், 59 நாடுகளுக்கு இந்தியர்கள் செல்லமுடியும்.
இந்த முன்னேற்றம், இந்தியாவின் வளர்ந்துவரும் உலகளாவிய செல்வாக்கின் குறிப்பிடத் தக்க சான்றாக அமைந்துள்ளது. இந்தியாவின் பாஸ்போர்ட் சக்தியின் வளர்ச்சி என்பது, நாட்டின் வளர்ந்து வரும் இராஜதந்திர ஈடுபாடு , பொருளாதார வலிமை மற்றும் பயணத்தை எளிதாக்குவதற்கான நாட்டின் ஒருங்கிணைந்த செயல்பாடுகள் ஆகியவற்றின் பிரதிபலிப்பாகும்.
வலிமையான பாஸ்போர்ட் ஒரு நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தி, வணிக பயணத்தை எளிதாக்கி, வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் என்பது குறிப்பிடத்தக்கது.