தருமபுரி அருகே சாலையோரம் உள்ள வீட்டின் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நூலஹள்ளி பகுதியில் இருந்து தருமபுரி நோக்கி அரசு பேருந்து ஒன்று புறப்பட்டுச் சென்றது. உழவன்கொட்டாய் அருகே சென்றபோது திடீரென ஸ்டேரிங் கட்டானதால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் இருந்த ராமு என்பவர் வீட்டின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமி மற்றும் பேருந்து ஓட்டுநர் தேவராஜ் ஆகியோர் படுகாயமடைந்தனர். உடனடியாக, அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், காலாவதியான பேருந்துகளால் அடிக்கடி இதுபோன்ற விபத்துகள் ஏற்படுவதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.