மிசஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்திலிருந்து இளையராஜா பாடலை நீக்க மாட்டேன் என வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
நடிகை வனிதா விஜயகுமார் தயாரிப்பில் வெளியான மிசஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்தில், தனது பாடலை உரிய அனுமதியின்றி பயன்படுத்தியதாகக் கூறி இசையமைப்பாளர் இளையராஜா தரப்பில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கின் விசாரணைக்காக வனிதா விஜயகுமார் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.
நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி அமர்வு முன்பு நடந்த விசாரணையின் போது, தனது படத்தில் பயன்படுத்தப் பாடலின் உரிமையைச் சோனி நிறுவனம் வாங்கி வைத்திருப்பதாகவும், சோனி நிறுவனத்திடம் பணம் செலுத்தி சட்டப்படி பாடலை பயன்படுத்தி இருப்பதாகவும் நடிகை வனிதா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து,சோனி நிறுவனத்தை வழக்கில் இணைக்க உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 18ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.