உத்தரப்பிரதேசத்தில் , வெளிநாடுகளின் பெயரில் போலியாகத் தூதரகம் தொடங்கி மோசடி ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். வித்தியாசமான இந்த மோசடி குறித்த செய்தி தொகுப்பை தற்போது காணலாம்..
போலி மருத்துவமனை, போலி நிதி நிறுவனம், போலி வங்கிகள் குறித்த செய்திகளை நாம் அடிக்கடி கேள்விப்பட்டிருப்போம். போலி நீதிமன்றம் பற்றிக் கூட சில ஆண்டுகளுக்கு முன்பு செய்தி வெளியானது. ஆனால், தற்போது போலி தூதரகத்தை உருவாக்கி பணமோசடி செய்து அனைவரையும் அதிரச் செய்துள்ளார் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர்.
உத்தரப் பிரதேச மாநிலம் காஸியாபாத்தை சேர்ந்தர் ஹர்ஸ்வர்தன் ஜெயின். தொடக்கம் முதலே பல்வேறு மோசடி செயல்களில் ஈடுபட்ட அவர், ஒரு புதுமையான முயற்சியாகப் போலி தூதரகம் ஒன்றைத் தொடங்க முடிவெடுத்தார்.
அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து போன்ற பெரிய நாடுகளின் பெயரில் தூதரகம் தொடங்கினால், தூதரகம் தொடங்கிய அடுத்த நொடியே கம்பி எண்ண வேண்டி வரும் என்பதை அவர் நன்கு உணர்ந்திருந்தார்.
ஆகவே, செபோர்கா, பவுல்வியா, லோடோனியா போன்ற அங்கீகரிக்கப்படாத சிறிய நாடுகளின் பெயரில் தூதரகங்களை ஆரம்பித்தார். அதற்காக காஸியாபாத் நகரில் 2 மாடி கட்டடம் ஒன்றையும் வாடகைக்கு எடுத்தார்.
தூதரகம் தொடங்கினால் மட்டும் போதுமா? அதனை மக்கள் நம்ப வேண்டாமா? எனவே, பிரதமர் மோடி, ஏபிஜே அப்துல் கலாம் போன்றவர்களுடனும், உலக நாட்டுத் தலைவர்களுடனும் சேர்ந்து எடுத்துக் கொண்டது போன்ற புகைப்படங்களைத் தயார் செய்து அலுவலகம் முழுவதும் தொங்கவிட்டார்.
சமூக வலைதளங்களிலும் தனது தூதரகத்திற்கென்று பிரத்யேக கணக்குகளைத் தொடங்கிய அவர், தூதரகத்தின் செயல்பாடுகளை அவ்வப்போது பதிவிட்டு வந்தார். பல்வேறு நாடுகளின் போலி முத்திரைகள், போலி நெம்பர் போர்டுகள், போலி பாஸ்போர்ட்கள் என பார்த்துப் பார்த்து ஒவ்வொன்றையும் செய்து முடித்தார் ஹர்ஸ்வர்தன் ஜெயின்.
வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்ல வேண்டுமா?.. அதுவும் குறைந்த செலவில்?.. சற்றும் தாமதிக்காமல் தனது தூதரகத்தை அணுகலாம் என அறிவித்த அவர், பல்வேறு நபர்களிடம் லட்சக்கணக்கில் பணத்தைப் பெற்று ஏமாற்றினார்.
அதோடு, பார்ட் டைமாக ஹவாலா பண மோசடியிலும் ஈடுபடத் தொடங்கினார். எல்லாம் சரியாகத்தான் சென்றுகொண்டிருந்தது. ஆனால், யார் கண் பட்டதோ தெரியவில்லை. இந்த போலி தூதரகம் குறித்த செய்தி காவல்துறையின் காதுக்குச் சென்றுவிட்டது.
உடனடியாக இது குறித்த சோதனை செய்த போலீசார், போலி தூதரகம் நடத்தி வந்த ஹர்ஸ்வர்தன் ஜெயினை கைது செய்தனர். மேலும், 34 நாட்டு முத்திரைகள், 44 லட்சம் ரூபாய் பணம், 18 தூதரக நம்பர் பிளேட்கள், 4 ஆடம்பர கார்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், சர்வதேச ஆயுத வியாபாரி அட்னான் கஷோகி மற்றும் ஆன்மீக குரு சந்திரசாமி ஆகியோருடன் ஹர்ஸ்வர்தனுக்கு தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மோசடி செய்வதில் காட்டிய இந்த நுட்பத்தையும், இந்த தனித்துவத்தையும் உருப்படியாக ஒரு தொழில் தொடங்கி, அதில் காட்டியிருந்தால் ஹர்ஸ்வர்தன் ஜெயின் சாதித்திருப்பார் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.