பயங்கரவாதத்திற்கு ஆதரவான பாகிஸ்தான் செயல்பாடுகளை மீண்டும் ஒருமுறை உலக அரங்கில் அம்பலப்படுத்தியுள்ளது இந்தியா. ஐநா பாதுகாப்பு அவையில் பாகிஸ்தான் மீது இந்தியா அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தற்போது முன்வைத்துள்ளது. இது குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.
இந்தியா சுதந்திரம் பெற்ற அதே நேரத்தில்தான் பாகிஸ்தானும் சுதந்திரம் பெற்றது. ஆனால், இந்த 78 வருடங்களில் இந்திய அடைந்த பொருளாதார வளர்ச்சியில் பாதியளவைக் கூட பாகிஸ்தானால் எட்டி பிடிக்க முடியவில்லை.
எந்தெந்த நாடுகளுக்குச் சென்று எந்தெந்த துறைகளில் வளர்ச்சிக்கான ஒப்பந்தங்களை மேற்கொள்ளலாம் என இந்தியத் தலைவர்கள் யோசித்துக்கொண்டிருக்கும்போது, எந்த நாடுகளுக்குச் சென்று எவ்வளவு கடன் வாங்கலாம் எனப் பாகிஸ்தான் தலைவர் சீரியசாக சிந்தித்தபடி உள்ளனர்.
மேலும், ”எங்கள் நாட்டின் பொருளாதார நிலை அதலபாதாளத்தில் உள்ளது.
எனவே, தயவு செய்து கடன் தந்து உதவுங்கள்” என ஓயாமல் சர்வதேச நாணய நிதியத்தின் கதவைப் பாகிஸ்தான் தட்டியபடி உள்ளது.
இதனால், ஒருபுறம் இந்தியப் பொருளாதாரம் அசுர வேகத்தில் உயர்ந்துகொண்டிருக்க, மறுபுறம் பாகிஸ்தான் கடன் மதிப்பு படு பாதாளத்தில் சென்று கொண்டிருக்கிது. பாகிஸ்தானை எந்த நாடும் அரவணைத்துக் காப்பாற்றத் தயாராக இல்லை. ஏனென்றால் அந்நாட்டின் track record அப்படி.
ஆனால், எத்தகைய பொருளாதார சிக்கல் ஏற்பட்டபோதும், பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து, பயங்கரவாத செயல்களுக்கு அபயக்கரம் நீட்டப் பாகிஸ்தான் எப்போதும் தவறியதில்லை. பாகிஸ்தானின் இந்த பயங்கரவாத ஆதரவு முகத்தைத்தான், இன்று சர்வதேச அரங்கில் கிழித்துத் தொங்கவிட்டுள்ளது இந்தியா.
ஐநா பாதுகாப்பு அவையின் தலைவராகப் பாகிஸ்தான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சர்ச்சைகளை அமைதியான முறையில் தீர்த்து வைப்பதன் மூலம் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை ஊக்குவித்தல் என்ற தலைப்பில் கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது. இதற்குப் பாகிஸ்தான் துணைப் பிரதமர் இஷாக் தர் தலைமை வகித்தார்.
அப்போது பேசிய அவர், ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்தும், சிந்து நதி நீரை இந்தியா நிறுத்தியது குறித்தும் கருத்துகளைத் தெரிவிக்கத் தொடங்கினார். இதற்குப் பதிலளித்த, ஐநாவுக்கான நிரந்தர இந்தியத் தூதரான பர்வதநேனி ஹரிஷ், உலகளாவிய அமைதியையும், பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்றால், பயங்கரவாத விவகாரங்களில் நாம் சிறிதும் சகிப்புத் தன்மை காட்டக் கூடாது என கூறினார்.
முன்னேற்றம், செழிப்பு, வளர்ச்சி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட நாடு இந்தியா என்பதை உலக நாடுகள் அறிந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இதற்கு நேர்மாறான தோற்றத்தைப் பாகிஸ்தான் கொண்டிருப்பதையும் சுட்டிக்காட்டினார். மேலும், மதவெறி மற்றும் பயங்கரவாதத்தில் பாகிஸ்தான் மூழ்கியுள்ளதாகவும் ஐநாவுக்கான நிரந்தர இந்தியத் தூதர் கடுமையாக விமர்சித்தார்.
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து தொடர்ந்து கடன் வாங்கும் நாடு பாகிஸ்தான்தான் எனவும், அண்மையில்கூட 8 ஆயிரத்து 600 கோடி ரூபாயை பாகிஸ்தான் பெற்றுள்ளதாகவும் கூறினார். இதன்மூலம், சர்வதேச நாணய நிதியத்திடம் பாகிஸ்தான் பெற்ற ஒட்டுமொத்த கடன், 18 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை வளர்க்கும் நாடாகவும், சர்வதேச உறவுகளை மதிக்காத நாடாகவும் பாகிஸ்தான் உள்ளதாகத் தெரிவித்த பர்வதநேனி ஹரிஷ், இதற்காகப் பாகிஸ்தான் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை பற்றியும் விளக்கிய அவர், பாகிஸ்தான் விடுத்த வேண்டுகோளின் பேரில்தான் இந்தியா தாக்குதல் நடவடிக்கையை நிறுத்தியதாகத் தெரிவித்தார்
இப்படி, பக்கம் பக்கமாகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்து பாகிஸ்தானின் உண்மை முகத்தை இந்தியா அம்பலப்படுத்தியுள்ளது. நியாயமாகப் பார்க்க போனால் இதனைப் பாகிஸ்தான் தனக்கு இழைக்கப்பட்ட இழிவாகக் கருத வேண்டும். ஆனால், பாகிஸ்தான் அவ்வாறு எல்லாம் கருதாது. “யார் வேண்டுமானாலும் திட்டட்டும். எப்படி வேண்டுமானாலும் இழிவுபடுத்தட்டும். நாம் கேட்ட கடன் தொகை சேதாரமில்லாமல் கிடைத்தால் சரி” என்பதுதான் அந்நாட்டின் எண்ணமாக இருக்கும்.
ஆனால், பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் குற்றச்சாட்டுகள் பல்வேறு நாடுகளை யோசிக்க வைத்துள்ளன. அதே நேரத்தில், பாகிஸ்தான் கேட்டபோதெல்லாம் இனி கடன் கிடைக்காது. அதன் பயங்கரவாத ஆதரவு செயல்பாடுகளும் உலக நாடுகளால் உன்னிப்பாகக் கவனிக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை.