பாகிஸ்தானின் அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்ட ஷாஹீன்-III ஏவுகணை சோதனை மீண்டும் ஒரு முறை தோல்வியில் முடிந்துள்ளது. இது பாகிஸ்தானின் ராணுவத் திறனைக் கேலிக்குரியதாக்கி உள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
உலகின் ஒன்பது அணுசக்தி நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று. மொத்தம் 170 அணு ஆயுதங்களை வைத்துள்ள பாகிஸ்தான் அடுத்த ஆண்டுக்குள், கூடுதலாக 30 அணு ஆயுதங்களைத் தயாரிப்பதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இது, இந்தியாவுக்கு எதிராக முதல்-பயன்பாட்டு உத்தியைக் குறிக்கிறது.
பாகிஸ்தானின் ஏவுகணை மற்றும் அணுசக்தி திட்டங்களுக்குச் சீனா முழு ஆதரவை வழங்கி வருகிறது. குறிப்பாக. 1970ம் ஆண்டு பாகிஸ்தான் அணுசக்தி ஆணையம், ஒரு நாளைக்கு 10,000 பவுண்டுகள் யுரேனியத்தை செறிவூட்டும் திறன் கொண்ட முதல் ஆலையைத் தேரா காசி கானில் நிறுவியது. மேலும்,இந்த ஆலை ஆண்டுக்கு 360 கிராம் புளூட்டோனியத்தை உற்பத்தி செய்கிறது. இது இன்றும் பாகிஸ்தானின் அணுசக்தி திட்டத்தின் ஒரு முக்கிய அங்கமாக விளங்குகிறது.
பாகிஸ்தானுக்குள் உள்ள எந்த இலக்கையும் தாக்கும் திறன் கொண்ட அக்னி 3 ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாகச் சோதனை செய்தது. இதனையடுத்து, 2000 ஆண்டில், ஷாஹீன் 3 ஏவுகணையைத் தயாரிக்கத் தொடங்கியது பாகிஸ்தான். இந்தியாவின் உள்நாட்டு இலக்குகளைத் தாக்குவதற்காகவே, பாகிஸ்தான் ஷாஹீன் 3 ஏவுகணையை வடிவமைத்தது.
சொல்லப்போனால்,பாகிஸ்தானில் இருந்து செலுத்தினால், டெல்லி, மும்பை மற்றும் பெங்களூரு என இந்தியாவின் முக்கிய நகரங்களை நொடியில் தாக்க முடியும். மேலும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளையும் குறிவைக்க முடியும்.
ஷாஹீன் 3 தரையிலிருந்து தரை இலக்கை தாக்கும் பாலிஸ்டிக் ஏவுகணை ஆகும். சுமார் 2,750 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கக் கூடியதாகும். இந்த ஏவுகணை 19.3 மீட்டர் நீளமும், 1.4 மீட்டர் விட்டமும் கொண்டதாகும். ஷாஹீன் 3 ஏவுகணை, சீன transporter erector launcher-ல் பொருத்தப்பட்டுள்ளது
2015-ல் முதல் சோதனை செய்யப்பட்டு, 2016-ல் தனது ராணுவ அணிவகுப்பில் ஷாஹீன் 3 முதன்முதலாக, காட்சிப்படுத்தப்பட்டது. இந்த ஏவுகணையின் சோதனை வெற்றிகரமாக முடிந்தால், பாகிஸ்தானின் ஆயுதக் களஞ்சியத்தில் மிக நீண்ட தூர ஏவுகணையாக இது இருக்கும் என்று கூறப்படுகிறது.
ஏற்கெனவே, 2020ம் ஆண்டு பாகிஸ்தானின் பாபர்-II ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்து, பெரும் விபத்தை ஏற்படுத்தியது. 2021ம் ஆண்டு ஜனவரியில், ஷாஹீன் 3 ஏவுகணை சோதனை தோல்வி அடைந்தது. பலூசிஸ்தான் தேரா புக்தியின் குடியிருப்புப் பகுதியில் விழுந்து நொறுங்கியது. 2022 ஆம் ஆண்டில், சிந்து மாகாணத்தின் ஜாம்ஷோரோவில் ஒரு மர்மமான ஏவுகணை விழுந்து நொறுங்கியது.
அக்டோபர் 2023 ஆம் ஆண்டு, தேரா காசி கானில் நடத்தப்பட்ட முந்தைய ஷாஹீன்-3 சோதனையும் தோல்வியடைந்தது. இந்த ஏவுகணை சோதனை விபத்தில், தேரா காசி கான் அணு ஆயுத ஆலையில் குண்டு வெடித்ததாகவும், அதன்பிறகு ஒரு அமெரிக்க அணுசக்தி மோப்ப விமானம் காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை, தேரா காசி கான் பகுதியில் பாகிஸ்தான் நடத்திய ஷாஹீன் 3 ஏவுகணை சோதனையும் தோல்வி அடைந்துள்ளது. ஏவப்பட்ட சிறிது நேரத்திலேயே ஏவுகணை திசை மாறி, மக்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் விழுந்து நொறுங்கியது.
ஏவுகணை வெடிப்பு மிகவும் தீவிரமாக இருந்த காரணத்தால், அதன் சத்தம் 50 கிலோமீட்டர் தூரம் வரை கேட்டதாகக் கூறப்படுகிறது. பலுசிஸ்தான் மற்றும் கைபர் பக்துன்க்வா பகுதிகளிலும் பயங்கர சத்தம் எதிரொலித்தது. பீதியடைந்த மக்கள் பயத்தில் ஓடும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளன.
ஷாஹீன் 3 ஏவுகணை டேரா காசி கான் அணுமின் நிலையத்தைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. மர்ம ட்ரோன் இந்த ஏவுகணையைத் தாக்கி இருக்கலாம் என்றும் தகவல்கள் பரவி வருகின்றன. நீண்ட காலமாகவே, பலுசிஸ்தானில் ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனைகளைத் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் நடத்தி வருகிறது. ஏவுகணை சோதனைகள் குறித்து பொதுமக்களுக்கு முன்கூட்டியே அறிவிக்கப்படுவதில்லை என்பதால் பலூச் மக்கள் எப்போதுமே ஆபத்தில் உள்ளனர்.
1998ம் ஆண்டு சாகாவில் நடந்த அணு ஆயுத சோதனைகளால், இன்றும் பலர் புற்றுநோய் மற்றும் தோல் நோய்களுக்கு ஆட்படுவதாகக் கூறப் படுகிறது. பாகிஸ்தான் பலூசிஸ்தானை ஒரு ஆயுத ஆய்வகமாகப் பயன்படுத்தி வருவதாகக் குற்றம் சாட்டியுள்ள பலூச் குடியரசுக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஷேர் முகமது புக்தி, பாகிஸ்தானின் ஏவுகணை மற்றும் அணுசக்தித் திட்டங்களுக்குத் தடை விதிக்குமாறு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் பாகிஸ்தானின் ஏவுகணை விபத்து சம்பவங்களால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஏற்கெனவே கண்டனம் தெரிவித்துள்ளன. பாகிஸ்தானின் தொடர்ச்சியான ஏவுகணை சோதனைகளின் தோல்விகள் அந்நாட்டின் இராணுவ நம்பகத்தன்மையைக் குறைத்துள்ளது.