திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளியை கண்டுபிடிக்கும் பணியில் ஏஐ தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிப்பதாக காவல்துறை உயர் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் அருகே 10 வயது சிறுமியை பின்தொடர்ந்து சென்று கத்திமுனையில் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு இளைஞர் தப்பியோடிய சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சம்பவம் நடந்து 10 நாட்களுக்கு மேலாகியும் இதுவரை குற்றவாளி கைது செய்யப்படவில்லை.
இதனால் திமுக அரசின் நிர்வாகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லை எனக்கூறி பல்வேறு அரசியல் கட்சிகள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றன. இதற்கிடையே ஏஐ தொழில்நுட்பம் மூலம் குற்றவாளியின் தெளிவான புகைப்படத்தை வெளியிட்டுள்ள போலீசார், அவர் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு சன்மானம் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளனர்.
இவ்வழக்கில் குற்றவாளியை கண்டுபிடிக்கும் பணியில் ஏஐ தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிப்பதாக காவல்துறை உயர் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளார். அத்துடன் விசாரணையில் கிடைத்துள்ள பல்வேறு துப்புகளின் அடிப்படையில், குற்றவாளி விரைவில் பிடிபடுவான் என்றும் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.