பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் நடை அடைக்கப்பட்ட பின் காவல்துறை அதிகாரியை சாமி தரிசனம் செய்ய அழைத்துச் சென்றதாக எழுந்த சர்ச்சையில், கோயில் பணியாளர்கள் இருவரை பணியிடை நீக்கம் செய்து அறநிலையத்துறை துணை ஆணையர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
கோவை மாவட்டம், பேரூரில் மிகவும் பிரசித்திபெற்ற பட்டீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் கடந்த 20-ம் தேதி தரிசன நேரம் முடிந்து நடை அடைக்கப்பட்ட பின்னர், கோயில் பணியாளர்கள் சிலர் மீண்டும் நடையை திறந்து காவல்துறை அதிகாரியான எஸ்.பி பாண்டியராஜனை சாமி தரிசனம் செய்ய அனுமதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சி வெளியானதால் ஆகம விதிகள் மீறப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, இந்து முன்னணி அமைப்பு சார்பில் அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், எஸ்.பி பாண்டியராஜனை சாமி தரிசனம் மேற்கொள்ள அழைத்துச் சென்ற கோயில் எலக்ட்ரீஷியன் வேல்முருகன் மற்றும் குருக்கள் சுவாமிநாதன் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து அறநிலையத்துறை துணை ஆணையர் செந்தில் குமார் நடவடிக்கை எடுத்துள்ளார்.