ஆடி அமாவாசையையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில், ஆடி அமாவாசையையொட்டி ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். கோயில் கடற்கரையில் தங்கள் முன்னோர்களுக்கு எள், தர்பைப்புல் உள்ளிட்டவை தர்ப்பணம் கொடுத்து சிறப்பு வழிபாடு நடத்தினர். பின்னர், கடலில் புனித நீராடி, கோயிலில் சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோன்று, கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை அருகே தாமிரபரணி படித்துறையில் ஆயிரக்கணக்கானோர் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து சிறப்பு வழிபாடு நடத்தினர். குழித்துறை தாமிரபரணி ஆறு உட்பட முக்கிய நீர்நிலைகளில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.