அன்புமணியின் நடைபயணத்திற்கு தடை விதிக்ககோரி டிஜிபி அலுவலகத்தில் ராமதாஸ் தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் மேற்கொள்ள உள்ளதாக கடந்த 22ஆம் தேதி அன்புமணி அறிவிப்பு வெளியிட்டார்.
தமிழகத்தில் ஸ்டாலின் ஆட்சியை அகற்றவும், மக்களின் உரிமைகளை மீட்பதற்காக நடைபயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் அறிவித்திருந்தார். திருப்போரூரில் தொடங்கவுள்ள நடைபயணம் தமிழகத்தின் முக்கியத் தொகுதிகள் வழியாக பயணித்து நவம்பர் 1ஆம் தேதி தருமபுரியில் நிறைவடையும் என கூறியிருந்தார்.
உரிமை மீட்பு பயணம் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள கட்சி தொண்டர்களை சந்திக்கவிருந்த நிலையில், அன்புமணியின் நடைபயணத்திற்கு தடைவிதிக்க கோரி ராமதாஸ் தரப்பில் டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அதில் பாமக நிறுவனரின் அனுமதி இல்லாமல் கட்சிக்கொடி மற்றும் நிர்வாகிகளை சந்தித்து பிரசார பயணத்தை மேற்கொள்வதை தடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.