தேனி நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தி, வழக்கறிஞர்கள் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி மாவட்டம், புதிய பேருந்து நிலையம் அருகே நில தகராறில் புதிய கட்டடங்கள் மற்றும் மதில் சுவர்கள் சேதப்படுத்தப்பட்டன. இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது முறையாக காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
எனினும், போலீசார் புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல், எதிர்மனுதாரருக்கு ஆதரவாக புகாரை பெற்று வழக்கறிஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், காவல்துறையின் செயலை கண்டித்துப் பணி புறக்கணிப்பில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள், நேற்று காலை முதல் நீதிமன்ற வளாகத்தினுள் உள்ளிருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இரவிலும் உள்ளிருப்பு போராட்டம் தொடர்ந்த நிலையில், வழக்கறிஞர்கள் மீதான வழக்கை ரத்து செய்து கட்டடங்களைச் சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும் என வழக்கறிஞர்கள் அறிவித்துள்ளனர்.