பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் பக்தர்கள் செல்போன் எடுத்து செல்ல கோயில் நிர்வாகம் தடை விதித்துள்ளது.
கோவை மாவட்டம் பேரூர் பகுதியிலுள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பட்டீஸ்வரர் கோயிலில், ஆகம விதிகளுக்குப் புறம்பாகக் காவல் உயரதிகாரி, சுவாமி தரிசனம் செய்த வீடியோ இணையத்தில் வெளியானது.
இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், கோயில் ஊழியர்கள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், பட்டீஸ்வரர் கோயிலில் பக்தர்கள் மொபைல்போன் எடுத்துச் செல்லக் கூடாதெனக் கோயில் நிர்வாகம் தடை விதித்துள்ளது.
கோயிலுக்குள் நுழைந்ததும், டிக்கெட் வழங்கும் அறைக்கு எதிரே உள்ள அறையில், பக்தர்கள் தங்களது கைப்பேசிகளைக் கொடுத்து விட்டுச் செல்ல வேண்டும் என்றும், சுவாமி தரிசனம் முடித்து வெளியே செல்லும்போது மொபைல்போன்களை பெற்றுச் செல்லலாம் எனவும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.