நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினரின் அமளி காரணமாக 4-வது நாளாக இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 21ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அன்றைய தினம் முதலே அனைத்து அவை நடவடிக்கைகளையும் ஒத்திவைத்துவிட்டு பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள், ஆப்ரேஷன் சிந்தூர் உள்ளிட்டவை குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கோரி வருகின்றனர்.
ஆனால், இதற்கு அவை தலைவர்கள் மறுப்பு தெரிவித்ததால், எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு அவையை முடக்கி வருகின்றனர். இதனால் கடந்த 3 நாட்களில் நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் மழைக்கால கூட்டத்தொடரின் 4-வது நாளான இன்றும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்த பணிகள் மேற்கொள்ளப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அவை நடவடிக்கைகள் முடங்கியதால், இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன. பிற்பகலுக்குப் பின்னரும் மீண்டும் அமளி தொடர்ந்ததால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டன.