கொலை முயற்சி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு முன்ஜாமீன் வழங்கியது குறித்து நேரில் ஆஜராகி விளக்கமளிக்கும்படி, கள்ளக்குறிச்சி மாவட்ட நீதிமன்ற நீதிபதிக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நிலம் அபகரிப்பு விவகாரத்தில் பஞ்சாயத்துத் தலைவர் மற்றும் அவரது கணவர் அத்துமீறி வீட்டில் நுழைந்து தாக்கியதாக விழுப்புரத்தைச் சேர்ந்த லஷ்மி பாலா என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், வழக்கை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்றக்கோரி லஷ்மி பாலா, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு முன்ஜாமீன் வழங்கியது குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட நீதிமன்ற நீதிபதி வரும் 28ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
















