இந்தியாவுக்கு எதிராகச் சென்ற நாடுகளை ஆதரவாகத் திருப்புவது அவ்வளவு எளிதான காரியமல்ல. ஆனால், அதை மிகச் சாதாரணமாகச் செய்து, வெளியுறவுக் கொள்கையில் ஒரு புதிய பாணியை மோடி பாணி என்று உருவாக்கி உலகையே வியக்க வைத்திருக்கிறார் பிரதமர் மோடி. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
2014ம் ஆண்டு, முதல் முறையாக இந்தியாவின் பிரதமராகப் பதவி ஏற்ற பிரதமர் மோடி, தனது பதவியேற்பு விழாவுக்கு, இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் உள்ளிட்ட சார்க் கூட்டமைப்பில் உள்ள தெற்காசியத் தலைவர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்தார்.
பிரதமராக மோடி பதவியேற்ற ஒரு வாரத்திலேயே, அண்டை நாடுகளுக்கும் பயனளிக்கும் வகையில் ‘சார்க் செயற்கைக்கோள்’ தயார் செய்ய திட்டம் வகுக்கப்பட்டது. இத்திட்டத்திலிருந்து பாகிஸ்தான் விலகிக்கொள்ள ’தெற்காசியா செயற்கைக்கோள்’ எனப் பெயரிடப்பட்டு, விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்தியாவுக்கும் அண்டை நாடுகளுக்கும் தொலைத்தொடர்பு மற்றும் ஒளிபரப்பு சேவைகளில் பெரும் பயனளிக்கும் விதமாக 450 கோடி ரூபாய் செலவில் ‘ஜிசாட் 9’ இஸ்ரோவில் தயாரிக்கப்பட்டது. அண்டை நாடுகளுடன் நட்புறவை மேம்படுத்தப் பிரதமர் மோடி எடுத்துவரும் பல்வேறு நடவடிக்கைகள் அமெரிக்க உள்ளிட்ட நேட்டோ நாடுகளால் பாராட்டப்பட்டது.
தெற்காசிய நாடுகளுடன் உறவை வலுப்படுத்துவதன் மூலம், அந்த மண்டலத்தில் அமைதியையும் வளர்ச்சியையும் நிலை நிறுத்துவதில் பிரதமர் மோடியின் கொள்கை முடிவுகள் மிக முக்கியமானவையாக உள்ளன. இன்றைக்கு உலகின் தெற்கின் குரல் வலிமைமிக்கதாக சர்வதேச அரங்கில் ஓங்கி ஒலிப்பதற்கும் பிரதமர் மோடியின் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கையே காரணம்.
இதன் தொடர்ச்சியாக, தனது இரண்டாவது பதவிக்காலத்தில் முதல் வெளிநாட்டுப் பயணமாக மாலத்தீவுக்கும் தொடர்ந்து இலங்கைக்குப் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
புவியியல் மற்றும் மக்கள் தொகை படியும் தெற்காசியாவின் மிகப்பெரிய நாடாக விளங்கும் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாகவும் உள்ளது. எனவே,தெற்காசியாவுக்கான தலைமைப் பொறுப்பை ஏற்கும் தகுதியும் ஆளுமையும் இந்தியாவுக்கே உள்ளது.
அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்று இந்தியா முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு, தனது பெல்ட் அண்ட் ரோடு திட்டம் மூலம், தெற்காசிய புவிசார் அரசியலில் பதற்றத்தையும் குழப்பத்தையும் சீனா உருவாக்கி வருகிறது.
இந்தச் சூழலில், 2015ம் ஆண்டு மொரிஷியஸுக்கு விஜயம் செய்தபோது , பிரதமர் நரேந்திர மோடி, பிராந்தியத்தில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியைக் குறிக்கும் SAGAR தொலைநோக்குப் பார்வையை வெளியிட்டார். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, 2025 ஆம் ஆண்டு மொரீஷியஸுக்குச் சென்ற பிரதமர் மோடி MAGASAGAR என்ற தொலைநோக்குப் பார்வை அறிமுகப்படுத்தினார். இதைத் தெற்காசியா முழுவதும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கான பரஸ்பர மற்றும் முழுமையான முன்னேற்றம் என்றும் தெரிவித்தார்.
அனைவருக்கும் பாதுகாப்பும் வளர்ச்சியும் என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, இந்த திட்டத்துக்கு Security and Growth for All in the Region ‘SAGAR’ என்று பெயரிடப் பட்டது. கோவிட்-19 காரணமாக உலகமே முடங்கிக் கிடந்த காலத்தில், மாலத்தீவு, மொரீஷியஸ், செஷல்ஸ், மடகாஸ்கர் ஆகிய நாடுகளுக்கு உதவி செய்வதற்காக மிஷன் சாகர் திட்டம் செயல்படுத்தப் பட்டது.
கப்பல் மூலமாக மருந்துகள், சிறப்பு ஆயுர்வேத மருந்துகள் அனுப்பப் பட்டன. சிறந்த மருத்துவ உதவிக்குழுக்களும் அனுப்பிவைக்கப் பட்டன. மிஷன் சாகர் ஒன்றில், ஐஎன்எஸ் கேசரி 55 நாட்களில் 7,500 கடல் மைல்களுக்கு மேல் பயணம் செய்து ஜூன் 28, 2020 அன்று கொச்சி துறைமுகத்திற்குத் திரும்பியது.
மிஷன் சாகர் இரண்டில், ஐஎன்எஸ் ஐராவத் கப்பல் சூடான், தெற்கு சூடான், ஜிபூட்டி மற்றும் எரித்திரியா ஆகிய நாடுகளுக்கு உணவு மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களைக் கொண்டு சென்று விநியோகம் செய்தது.
கம்போடியா மற்றும் வியட்நாமில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தைத் தொடர்ந்து பேரிடர் நிவாரணத்துக்காக மிஷன் சாகர் மூன்றில், INS கில்தான் கப்பலில் 15 டன் உணவுப்பொருள்களைக் கொண்டு சென்று, மனிதாபிமான மற்றும் பேரிடர் உதவிகளை இந்தியா வழங்கியது
மிஷன் சாகர் நான்கில், ஐஎன்எஸ் ஜலஷ்வா கப்பலில் 1000 மெட்ரிக் டன் அரிசி, கொமோரோசுக்கு அனுப்பிவைக்கப் பட்டது. 2015-ம் ஆண்டுக்குப் பிறகு இரண்டாவது முறையாக மாலத் தீவுக்குப் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, இந்தியா உதவியுடன் மேற்கொள்ளப்படும் ஏராளமான மேம்பாட்டுத் திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.
கோவிட் பெருந்தொற்றுக் காலத்தின் போது இலங்கைக்குத் தேவையான தடுப்பூசிகளை வழங்கிய முதல் நாடு இந்தியா ஆகும். தன் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடியை 2022ஆம் ஆண்டு இலங்கை சந்தித்தபோது, தேவையான உணவு பொருட்கள், எரிபொருள், மருந்துகள் எனக் கிட்டத்தட்ட 4 பில்லியன் டாலர் மதிப்புடைய உதவியை இந்தியா வழங்கியது.
கடந்த செப்டம்பரில் அநுர குமார திஸாநாயக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் பிரதமர் மோதி உடனடியாகத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். தனது முதல் வெளிநாட்டுப் பயணத்தை இந்தியாவுக்கு மேற்கொள்ள முடிவு செய்து, இந்தியப் பெருங்கடல் அரசியலில், தாம் இந்தியாவுக்கு எதிராக இருக்கப் போவதில்லை என்பதை இலங்கை அதிபர் சுட்டிக்காட்டினார்.
மார்க்சிஸ்ட் தலைவர் அனுர குமார திசாநாயக்கவின் கீழ் இலங்கை இந்தியாவிலிருந்து விலகிச் செல்லும் என்ற கருத்துக்கள் காணாமல் போயின.
2015 ஆம் ஆண்டு இலங்கைக்குப் பயணம் செய்த பிரதமர் மோடி, இந்த முறை இலங்கைக்குச் சென்ற நிலையில், இரு நாடுகளுக்கும் இடையில் மின் கட்டமைப்பை உருவாக்குவது, இந்தியா – ஐக்கிய அரபு அமீரகம் – இலங்கை ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து திருகோணமலையை எரிசக்தி மையமாக வளர்த்தெடுப்பது, கடன் மறுசீரமைப்பு ஆகியவை குறித்த ஒப்பந்தங்களும் கையெழுத்தாகியுள்ளன.
மாலத்தீவு மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளிலும் உள்ள அரசியல் இந்தியாவுக்கு எதிராகவே உள்ளது. சீனாவுக்கு நெருக்கமாக இருந்த நாடுகளின் அதிபர்கள்,இந்தியாவுக்கு எதிராகவே கருத்துக்களை வெளியிட்டு வந்தனர்.
இந்தியாவே வெளியேறு என்ற கோஷத்துடன் நடத்திய தேர்தல் பிரச்சாரத்தால் தாம் அதிபரானால் இந்திய ராணுவத்தை மாலத்தீவில் இருந்து வெளியேற வைப்பேன் என வாக்குறுதி அளித்த முகமது முய்சுவை மாலத் தீவு மக்கள் வெற்றி பெற வைத்தனர். இதையடுத்து, இந்திய இராணுவ வீரர்களை வெளியேற்றினார்.
வழக்கமாக மாலத்தீவின் புதிய அதிபர்கள் இந்தியாவுக்கு முதன் முதலில் இந்தியாவுக்கு வருவதையே வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இந்த மரபை உடைத்த முகமது முய்சு, அதிபராகப் பதவி ஏற்றதும் முதன் முறையாகத் துருக்கிக்குப் பயணம் மேற்கொண்டார்
இந்தியாவிடம் இருந்து நிதி உதவி கிடைக்காவிட்டால் மாலத்தீவு பல இழப்புகளைச் சந்திக்க நேரிடும் என்பதை உணர்ந்த முகமது முய்சு, மாலத்தீவு-இந்தியா இடையேயான உறவு பாதிக்கும் வகையில் எந்த ஒரு நடவடிக்கையிலும் ஒரு போதும் ஈடுபடமாட்டேன் என்று அறிவித்தார்.
மூன்றாவது முறையாகப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவுக்கு, மாலத்தீவின் அதிபருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவரும் கலந்து கொண்டார். கடந்த ஆண்டுகளில், மாலத்தீவுக்கு 420 கோடி நிதி ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது போலவே, இந்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், மாலத்தீவுகளுக்கான வளர்ச்சி உதவியாக 600 கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டது.
‘அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை’ என்ற பிரதமர் மோடியின் கொள்கையின் படி, பூட்டானுக்கு 2,150 கோடி ரூபாய் நிதிஉதவி. அதைத் தொடர்ந்து நேபாளத்துக்கு 700 கோடி ரூபாயும், மாலத்தீவுக்கு 600 கோடி ரூபாயும் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளன.
மேலும், மொரீஷியஸின் உதவி 576 கோடியிலிருந்து 500 கோடியாகக் குறைக்கப்பட்ட அதே நேரத்தில் மியான்மரின் ஒதுக்கீடு 400 கோடியிலிருந்து 350 கோடியாகக் குறைந்துள்ளது. வங்கதேசத்துக்கும் இலங்கைக்கும் முறையே 120 கோடி மற்றும் 300 கோடி ரூபாய் நிதிஉதவி வழங்கப் பட்டுள்ளன. ஆப்பிரிக்க நாடுகள் 200 கோடியிலிருந்து 225 கோடி நிதி உதவியை இந்தியாவில் இருந்து பெற்றுள்ளன.
மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவின் அழைப்பின் பேரில் அந்நாட்டின் 60-வது சுதந்திர தின கொண்டாட்டங்களில் கலந்து மாலத்தீவுக்குச் செல்லும் பிரதமர் மோடி, பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் மாலத்தீவுக்கு உதவும் வகையில், விரிவான பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்புக்கு அடித்தளம் அமைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெரும்பாலும் மனதில் உறுதி, கடமையில் நேர்மை, தேசப்பக்தி நிறைந்த வாழ்க்கை எனப் பிரதமர் மோடி, ஒருபோதும் ஆத்திரமூட்டல்களுக்கு அடிபணிவதில்லை. இலட்சியத்தில் உறுதியாக நிற்கிறார். அண்டை நாடுகளின் அரசியல் மாற்றங்களைக் கையாளும் போது செயல்பாட்டில் நிதானத்தைக் காட்டுகிறார்.
அந்தந்த நாடுகளின் இறையாண்மைக்கு மதிப்பு கொடுத்து, பரஸ்பர நம்பிக்கையை வளர்த்தெடுக்கிறார். பகைமைக்கு அப்பாற்பட்டு, நல்லுறவுகளைப் பேணுகிறார். சரியான நேரத்தில் தேவையான உதவிகளைச் செய்து, உறவுகளை மேம்படுத்துகிறார். அதனாலே அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்று தொடங்கி, இந்தியாவை விஸ்வ குருவாக உயர்த்தி வருகிறார்.