மன உளைச்சல் காரணமாகப் பணி செய்ய இயலாத சூழ்நிலையில் தனக்கு விருப்ப ஓய்வு அளிக்குமாறு டிஎஸ்பி ஒருவர் உள்துறை செயலாளருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
திருச்சி மாவட்ட காவல்துறையில் மாவட்ட குற்றப்பிரிவில் துணை கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர் பரத் ஸ்ரீனிவாஸ்.
இவர் 1997ஆம் ஆண்டு உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்து தற்பொழுது துணை கண்காணிப்பாளராக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் தன்னுடைய குடும்ப சூழ்நிலை மற்றும் மன உளைச்சல் காரணமாகத் தொடர்ச்சியாக தன்னால் பணி செய்ய இயலவில்லை எனவும் விருப்ப ஓய்வில் செல்ல விரும்புவதாகவும் கூறியுள்ளார்.
எனவே தனக்கு விருப்ப ஓய்வில் செல்ல அனுமதி வழங்குமாறு உள்துறை செயலாளருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
இந்தக் கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் டிஎஸ்பி -க்கு தனிப்பட்ட காரணங்களால் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதா அல்லது பணிச் சுமை காரணமாக மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வி காவல்துறை வட்டாரத்தில் எழுந்துள்ளது.