கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆடி திருவாதிரை விழாவில் ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தைப் பிரதமர் மோடி வெளியிடுகிறார்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெறவுள்ள ஆடித் திருவாதிரை விழாவில் பங்கேற்பதற்காக நாளை இரவு 7.50 மணிக்குப் பிரதமர் மோடி தூத்துக்குடி விமான நிலையம் வருகிறார்.
தூத்துக்குடியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர் மோடி, தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனையம் மற்றும் முடிவுற்ற திட்டப் பணிகளைத் தொடங்கி வைக்கிறார்.
பின்னர், அங்கிருந்து புறப்பட்டு இரவு 10.35 மணியளவில் திருச்சி விமான நிலையம் செல்லும் அவர், அரசு விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வெடுக்கிறார்.
பின்னர், 27ஆம் தேதி காலை 11 மணிக்கு ஹெலிகாப்டரில் அரியலூரில் உள்ள கங்கைகொண்ட சோழபுரத்திற்குச் செல்லும் பிரதமர் மோடி, சாலையில் நடந்து சென்று மக்களைச் சந்திக்கிறார்.
இதனை அடுத்து, பிரதமர் மோடி, வாரணாசியிலிருந்து கொண்டு வரும் கங்கை நீரைக் கொண்டு, பிரகதீஸ்வரருக்கு மகா அபிஷேகம் நடைபெறுகிறது.
பிரகதீஸ்வரர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்யும் பிரதமர் மோடி, கோயிலில் அமர்ந்து சில நிமிடங்கள் தியானம் செய்யவுள்ளார்.
தொடர்ந்து, கோயில் சிற்பங்களையும், தொல்லியல் துறை சார்பில் அமைக்கப்படும் புகைப்பட கண்காட்சியையும் பிரதமர் மோடி பார்வையிடுகிறார்.
பின்னர், அங்கு நடைபெறும் விழாவில், ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தைப் பிரதமர் மோடி வெளியிடுகிறார்.
இதனை அடுத்து , இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை நிகழ்ச்சியைக் கண்டுகளிக்கும் பிரதமர் மோடி, கோயிலில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திருச்சிக்குச் செல்கிறார்.
பின்னர், திருச்சியில் இருந்து பகல் 2.30 மணியளவில் பிரதமர் மோடி, தனி விமானம் மூலம் டெல்லிக்குப் புறப்பட்டுச் செல்கிறார்.