இந்திய ரயில்வேயில் ஒரு நிமிடத்தில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் டிக்கெட் முன்பதிவு செய்யும் வகையில் சர்வரின் வேகத்தை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ரயில் பயணத்திற்காக டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகள் கணினி, செல்போன் போன்ற சாதனங்களை பயன்படுத்துகின்றனர். பெரும்பாலும் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது சர்வர் பிரச்சனை ஏற்படுகிறது.
இதனால் அவதியடையும் பயணிகள் தங்களது பயணத் திட்டத்தை மாற்றி அமைக்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இந்த சிரமத்தைக் குறைக்கும் நடவடிக்கையாக சர்வரின் வேகத்தையும், தரத்தையும் உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
அதன்படி ஒரு நிமிடத்தில் 1 லட்சத்து 50 ஆயிரம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யும் வகையில் மத்திய அரசு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இந்த அறிவிப்பு ரயில் பயணிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.