குளச்சல் அருகே உடல் எடையைக் குறைக்கப் பழங்களை மட்டும் சாப்பிட்டு வந்த சிறுவன் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியைச் சேர்ந்த சக்தீஸ்வர் என்பவர், 12ஆம் வகுப்பு முடித்து விட்டு கல்லூரியில் சேரவிருந்த நிலையில், உடல் எடை அதிகரிப்பு காரணமாக அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
உடல் எடையைக் குறைக்கக் கடந்த ஒரு மாதமாக யூடியூபை பார்த்து வெறும் பழங்களை மட்டும் சக்தீஸ்வர் உட்கொண்டு வந்ததாகத் தெரிகிறது.
இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்ட சக்தீஸ்வருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக, பெற்றோர் மகனை மீட்டு குளச்சலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சக்தீஸ்வர் ஏற்கனவே இறந்து விட்டதாகக் கூறியுள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார், சடலத்தைப் பிரேதப் பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மாணவர் உயிரிழப்பு குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.