தென் கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே போர் மூண்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட காலமாக இருந்து வரும் எல்லை பிரச்சனை காரணமாக மீண்டும் இராணுவ மோதல் தொடங்கியுள்ளது. இருநாடுகளுக்கும் இடையே நீடிக்கும் நீண்ட கால பிரச்சனைக்கு என்ன காரணம் என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
சர்வதேச உறவுகளை வடிவமைப்பதில் தேசிய அடையாளங்கள் மற்றும் வரலாற்று நினைவுகள் ஒரு ஆழமான பங்கை வகிக்கின்றன. பல்வேறு மக்களை ஒன்றிணைக்க அல்லது பல்வேறு மாகாணங்களை ஒரு நாடாக நிலைநிறுத்தக் கடந்த காலத்தின் பாரம்பரிய சின்னங்கள் முன்னிறுத்தப் படுகின்றன.
தாய்லாந்து -கம்போடிய எல்லைக்கு அருகிலுள்ள டாங்க்ரெக் மலைகளில் உயரமாக அமைந்துள்ள ஒரு அமானுஷ்ய பண்டைய கோயில் வளாகமான பிரியா விஹாரும் அப்படித் தான்.
800 கிலோமீட்டருக்கும் அதிகமான நில எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் தாய்லாந்தும் கம்போடியாவும் லாவோஸ் நாட்டுடனும் எல்லையுடன் பகிர்ந்து கொள்கின்றன. அதனால் இந்த எல்லைப் பகுதி எமரால்டு முக்கோணம் என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பகுதியில் ஏராளமான இந்துக் கோயில்கள் உள்ளன. அதில் ஒன்று தான் பிரியா விஹார்.
பிரியா விஹாரின் கதை ஒரு சோகமானது. இருநாடுகளுக்கும் இடையேயான வரலாற்று இராணுவ மோதல்களுக்கும் அதிகார அரசியல் சதுரங்க ஆட்டங்களுக்கும் மையப் புள்ளியாக இந்த கோயில் உள்ளது. தாய்லாந்து மக்கள் ஃபிரா விஹார்ன் என்று அழைக்கும் பிரியா விஹார் கோயில் வளாகம் தென்கிழக்கு ஆசியாவின் பாரம்பரிய மிக்க இடமாக உள்ளது.
12 ஆம் நூற்றாண்டுகளில், கெமர் பேரரசின் பொற்காலத்தைச் சேர்ந்தவையாக இந்த கோயில்கள் அறியப்படுகின்றன. நவீன கம்போடிய மக்கள், தங்களைக் கெமர் வம்சத்தின் நேரடி வாரிசுகளாகக் கருதுகிறார்கள். தங்கள் முன்னோர்கள், அங்கோரில் அற்புதமான கோயிலைக் கட்டி, தாய்லாந்தின் பெரும்பகுதியை ஆட்சி செய்து வந்ததாக நம்புகிறார்கள்.
பிரியா விஹார், கெமர் மன்னர்களின் பிரதான சிவன் கோயிலாக விளங்கியுள்ளது. இன்றும் மிச்சமுள்ள கோயில் வளாகத்தில் பெரிய நந்தியும் சிவலிங்கமும் உள்ளன. என்னதான் பிரியா விஹார், கெமர் மன்னர்கள் காட்டினாலும்,அது எப்போதும் கம்போடிய கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது இல்லை. பெரும்பாலும் தாய்லாந்து மன்னர்களின் கட்டுப்பாட்டில் தான் இருந்துள்ளது.
கெமர் பேரரசு வீழ்ச்சிக்குப் பிறகு, கம்போடிய தலைநகரான அங்கோர் உட்பட அனைத்து பகுதிகளையும் தாய்லாந்து அரசு கைப்பற்றியது. 1794-ல் கெமர் மன்னர், சிசோபோன் மற்றும் பட்டாம்பாங்கைச் சுற்றியுள்ள வடமேற்கு மாகாணங்களின் மீதான அதிகாரத்தைத் தாய்லாந்திடம் ஒப்படைத்தார். பதிலுக்குத் தாய்லாந்து, அங்கோர் உள்ளிட்ட பகுதிகளை கம்போடியாவிடம் விட்டுக் கொடுத்தது.
பிறகு அந்தப்பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்துக்குள் வந்தன. 1904 ஆம் ஆண்டில், ஒரு எல்லை ஒப்பந்தத்தைப் பிரெஞ்சு அரசு ஏற்படுத்தியது. அதில் பிரியா விஹார் அருகே உள்ள வடக்கு எல்லை டாங்க்ரெக் மலைகளின் நீர்நிலைக் கோட்டில் இயங்கும் என்று கூறப்பட்டது. பிரியா விஹாரின் கோயிலின் பெரும்பகுதி தாய்லாந்து நிலத்தில் அமைத்திருக்கும் நிலையில், பிரெஞ்சு ஒப்பந்தத்தில் அதற்கான எல்லை சரியாகக் குறிப்பிடப்படவில்லை.
1907ம் ஆண்டில், பிரெஞ்சு அதிகாரிகள் ஒரு நிலப்பரப்பு வரைபடத்தைத் தயாரித்து, பிரியா விஹார் முழுவதையும் கம்போடியாவின் எல்லைக்குள் கொண்டு வைத்தனர். இந்த வரைபடத்தைத் தாய்லாந்து ஏற்கவில்லை. 1941ம் ஆண்டில், ஜப்பானுடனான போரில், பிரியா விஹார் வளாகப் பகுதிகளைத் தாய்லாந்து கைப்பற்றியது.
1953 இல் பிரெஞ்சு காலனித்துவப் படைகள் தோற்றது. புதிதாகச் சுதந்திரம் பெற்ற கம்போடியா தனித்து நிற்க முயன்றாலும், தாய்லாந்து இராணுவம் பிரியா விஹாருக்குள் நுழைந்து அந்த பகுதிகளை முழுவதும் கைப்பற்றியது. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு கம்போடியா சர்வதேச நீதிமன்றத்தில் இது குறித்து வழக்குத் தொடர்ந்தது.
1990-களின் பிற்பகுதியில் கெமர் ரூஜ் போராளி அமைப்பு நொறுங்கிய பின்னரே பிரியா விஹார் பார்வையாளர்களுக்குத் திறக்கப்பட்டது. தொடர்ந்து வந்த ஆண்டுகளில், இருநாடுகளும் சுற்றுலாப் பயணிகளுக்கு உதவும் வகையில் நடவடிக்கைகளில் ஈடுபட்டன.
2008 ஆம் ஆண்டில் பிரியா விஹாரை யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாகப் பதிவு செய்ய கம்போடியா முயற்சி செய்தது. உரிமை குறித்த வரலாற்றுச் சர்ச்சை மீண்டும் எழுந்தது. தனக்கு சொந்தமான கோயிலைச் சுற்றியுள்ள நிலத்தை கம்போடியா எப்படி யுனெஸ்கோவுக்கு விண்ணப்பிக்க முடியும்? எனக் கேள்வி கேட்டு தாய்லாந்து ஆட்சேபனை தெரிவித்தது.
கம்போடியாவின் யுனெஸ்கோ விண்ணப்பம், தாய்லாந்தில் ஏற்கனவே பொங்கி எழுந்த அரசியல் நெருப்புப் புயலுக்கு எண்ணெய் ஊற்றியது. தாய்லாந்து பிரதமர் சமக் சுந்தரவேஜின் அரசு, கம்போடியா அரசின் திருத்தப்பட்ட விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டு, அந்நாட்டுடன் ஒரு அறிக்கையில் கையெழுத்திட்டது. உள்நாட்டில் குழப்பம் நீடித்தது. எதிர்க்கட்சிகள் வழக்கு தொடர்ந்தன.
தாய்லாந்து அரசியலமைப்பு நீதிமன்றம்,பிரியா விஹார் வளாகம் தாய்லாந்துக்குச் சொந்தம் என்று தீர்ப்பு வழங்கியது. அதற்கு அடுத்த நாள், பிரியா விஹாருக்கான கம்போடியாவின் விண்ணப்பத்தை யுனெஸ்கோ அங்கீகரித்தது.
இந்நிலையில் கடந்த மே மாதத்தில் நடந்த மோதலில் தாய்லாந்து வீரர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, பல கண்ணிவெடி வெடிப்பு சம்பங்கள் நடந்தன. எல்லைப்பகுதியில் ரஷ்யக் கண்ணிவெடிகளை கம்போடியா புதைத்து வைத்துள்ளதாகத் தாய்லாந்து கூறிய குற்றச்சாட்டுகளை கம்போடியா மறுத்துள்ளது.
ஆனாலும் கடந்த சில நாட்களில், 5 தாய்லாந்து வீரர்கள் கண்ணிவெடி விபத்தில் காயமடைந்தனர். ஒரு தாய்லாந்து வீரர் தன் காலை இழந்தார். தங்கள் எல்லைக்குள் தாய்லாந்து வீரர்கள் நுழைந்ததால் தற்காப்பு தாக்குதல் நடத்தியதாக கம்போடியா தெரிவித்தது.
தொடர்ந்து, எல்லையில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்த தாய்லாந்து, எல்லையை முழுவதுமாக மூடியது. இருநாடுகளும் தத்தம் தூதரக அதிகாரிகளைத் திரும்பப் பெற்றன. கம்போடியாவில் தாய்லாந்து திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் தடை செய்யப்பட்டன. தாய்லாந்திலிருந்து எரிபொருள், பழங்கள் மற்றும் காய்கறிகளை இறக்குமதி செய்வதையும் தடை செய்தது. சர்வதேச இணைய இணைப்புகள் மற்றும் மின்சார விநியோகமும் துண்டிக்கப்பட்டது.
கடந்த வியாழக் கிழமை, நடந்த இராணுவ மோதலில், 9 பேர் கொல்லப் பட்டனர்.10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். கம்போடியாவின் இரு மாகாணங்கள் மீது தாய்லாந்தின் ஆறு F -16 ரக போர் விமானங்கள் சரமாரியாகத் தாக்குதல்களை நடத்தியுள்ளன. கம்போடியா இராணுவ இலக்குகள் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியதைத் தாய்லாந்து உறுதிப்படுத்தியுள்ளது. சர்ச்சைக்குரிய கோவில் பகுதியில், தரைவழி வெடிகுண்டுகளும் வீசப் பட்டதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
தாய்லாந்தில் நேரலையில் ஒளிபரப்பாகிய இராணுவத் தாக்குதல் காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளன. அதில் பொதுமக்கள் உயிருக்குப் பயந்து, பாதுகாப்பான தங்குமிடங்களுக்குத் தப்பி ஓடுவதைக் காண முடிகிறது. தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளதால், 86 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 40,000 மக்கள் அவசரமாக வெளியேற்றப் பட்டுள்ளனர்.
தாய்லாந்தின் இந்த தாக்குதலை, “ஆயுதமேந்திய ஆக்கிரமிப்பு” என்று கம்போடிய பிரதமர் ஹுன் மானெட் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். பயங்கரமான மற்றும் மிருகத்தனமான இராணுவ ஆக்கிரமிப்பு என்று கண்டித்துள்ள கம்போடியா,தாய்லாந்து தனது படைகளைத் திரும்பப் பெறவேண்டும் என்றும், மேலும் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.