யுபிஐ பரிவர்த்தனைகளை மேலும் எளிதாக்க, ஆகஸ்ட் ஒன்றாம் தேதி புதிய விதிகள் அமலுக்கு வருகிறது. புதிய யுபிஐ விதிகள் என்ன? பயனர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன? என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.
இந்தியாவில் யுபிஐ மூலம் பணம் செலுத்தும் வசதியை நேஷனல் பேமண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா கடந்த 2016ம் ஆண்டு கொண்டுவந்தது. ரொக்கத்திற்கு மாற்றாக டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை ஊக்குவிக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட யுபிஐ முறை, தற்போது சாதாரண பெட்டிக்கடை முதல் பிரமாண்ட ஷோரூம் வரை பரவிக் கிடக்கிறது.
யுபிஐ மூலம் ஒவ்வொரு மாதமும் பல ஆயிரம் கோடி ரூபா அளவுக்குப் பணப் பரிமாற்றம் நடைபெறுவதாகவும், ஆண்டுதோறும் இது 32 சதவிகிதம் அளவுக்கு அதிகரித்து வருவதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
டிஜிட்டல் பணம் செலுத்தும் முறைகளில் 85 சதவிகிதம் யுபிஐ கணக்குகள் மூலமே நடைபெறுகிறது. இதில் 49 கோடியே 10 லட்சம் பேரும், 6 கோடியே 50 லட்சம் வணிகர்களும், 675 வங்கிகளும் ஒரே தளத்தில் பின்னிப் பிணைக்கப்பட்டிருப்பது பரிவர்த்தனையை எளிதாக்கியுள்ளது.
இது ரொக்கப் பரிவர்த்தனையை, கார்டு மூலம் பணம் செலுத்தும் முறையாக மாற்றி புதிய புரட்சியை ஏற்படுத்திய யுபிஐ பரிவர்த்தனை, அனைவரையும் டிஜிட்டல் பொருளாதாரத்திற்குள் தள்ளியுள்ளது. இந்தநிலையில், யுபிஐ முறையை மேலும் எளிதாக்கவும், பாதுகாப்பு, நம்பகத்தன்மையை அதிகரிக்கும் வகையிலும் ஆகஸ்ட் ஒன்று முதல் புதிய விதிகள் நடைமுறைக்கு வருகின்றன.
அதன்படி உங்கள் செல்போன் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகளைச் சரிபார்க்க ஒரே நாளில் 25 முறை மட்டுமே, UPI செயலிகள் அனுமதிக்கப்படும். இது யுபிஐ பரிவர்த்தனைகளை இலகுவாக்க உதவும். PhonePe, Google Pay, Paytm போன்ற UPI செயலிகளில், ஒரே நாளில் 50 முறை வரை மட்டுமே கணக்கு இருப்பை பார்வையிட முடியும். பல யுபிஐ ஆப்களில் அடிக்கடி balance check request அனுப்பப்படுவதால், பணப் பரிமாற்றங்களில் ஏற்படும் தாமதத்தைத் தடுக்க இது உதவும்.
Auto-Debit பணப்பரிவர்த்தனைக்கு புதிய நேர வரம்புகள் கொண்டுவரப்படுகின்றன. அதன்படி EMI, மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள், ஓடிடி சந்தாக்கள், காப்பீடு கட்டணம் போன்றவை காலை 10 மணிக்கு முன்னதாகவும், பிற்பகல் 1 முதல் 5 மணி வரையிலும், இரவு 9.30 மணிக்கு பிறகும் அனுமதிக்கப்படும். இது தடையற்ற சேவைக்கு வழிவகுக்கும்.
யுபிஐ மூலம் பணம் அனுப்பும்போது ஒருவேளை தாமதம் ஏற்பட்டால் transaction நிலையை 90 வினாடிகள் இடைவெளியில் மூன்று முறை மட்டுமே சரிபார்க்க முடியும். இது transaction retry மற்றும் refund செயல்பாடுகள் சீராக நடைபெற உதவும்
யுபிஐ மூலம் பணம் அனுப்பும் நேரம் 15 வினாடிகளாகக் குறைக்கப்பட்டுள்ளது.தவறான பரிவர்த்தனைகளைச் சரிபார்க்கும் நேரம் 10 வினாடிகளுக்கு மட்டுமே இருக்குமாறு மாற்றம் செய்யப்பட்டது. இந்த மாற்றங்கள் அனைத்தும் செயலியில் தானாகவே ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும்.
நாளுக்கு நாள் யுபிஐ பயனாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில், பரிவர்த்தனையை எளிதாக்க, தங்கு தடையின்றி சேவைகளை வழங்க புதிய விதிகள் பயன்படும் என்று எதிர்பார்க்கலாம்.