டிரான்ஸ்பார்மர்களை கொள்முதல் செய்வதற்கான டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு தொடர்பாக வழக்குப்பதிவு செய்யக் கோரிய மனுவுக்குப் பதிலளிக்க, லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ய நடந்த டெண்டர் ஒதுக்கீட்டில் 397 கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக அளிக்கப்பட்ட புகார் மீது, வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட கோரி உயர்நீதிமன்றத்தில் அதிமுக நிர்வாகி மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு, நீதிபதி வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், ஏற்கனவே இதே கோரிக்கையுடன் அறப்போர் இயக்கம் தாக்கல் செய்த வழக்கு விசாரணையில் உள்ளதாகக் குறிப்பிட்டார்.
இதையடுத்து, இந்த வழக்கில் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனர், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மற்றும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் நான்கு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி,அறப்போர் இயக்கம் தாக்கல் செய்த வழக்கையும், இந்த வழக்கையும் சேர்த்து விசாரணைக்குப் பட்டியலிடவும் உத்தரவிட்டார்.