திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாகக் கைது செய்யப்பட்ட அசாமைச் சேர்ந்த நபரிடம் விசாரணை நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் ரயில் நிலையம் வழியாகக் கடந்த 12-ம் தேதி நடந்து சென்ற 10 வயது சிறுமி மர்மநபரால் கடத்தி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
சிறுமியைக் கடத்திச் சென்ற சிசிடிவி காட்சி இருந்தும் கடந்த 12 நாட்களாக குற்றவாளியைப் பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வந்தனர். தொடர்ந்து ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட குற்றவாளியின் தெளிவான புகைப்படத்தை வெளியிட்டுத் தேடி வந்தனர்.
இந்நிலையில் சம்பவம் நிகழ்ந்த நாளில் குற்றவாளி அணிந்திருந்த டி-சர்ட் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு ஆரம்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் அவர் அசாமை சேர்ந்தவர் என்பதும், சூலூர்பேட்டையில் உள்ள ஹோட்டலில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.
மேலும், அவரை வீடியோவாக பதிவு செய்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோருக்கு வாட்ஸ்-அப்பில் போலீசார் அனுப்பினர்.
அதனைப் பார்த்த சிறுமி, அந்த நபர்தான் குற்றவாளி எனக் கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, கவரப்பேட்டடை காவல் நிலையத்தில் இருந்து போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.